ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார்: கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. அதிரடி மாற்றம்...தேர்தல் ஆணையம் நடவடிக்கை.!!!

சென்னை: ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.  அவர்களுக்கு தேர்தல் அல்லாத பணிகளை ஒதுக்கும்படியும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு, இன்னும் 5 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக அமைச்சர்கள் மீது தொடர் ஊழல் புகார்கள் மற்றும்  கோஷ்டி மோதல்களால் பொதுமக்கள், ஆளுங்கட்சியினர் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதனால் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால்தான் ஓரளவுக்கு  இடங்களைப் பிடிக்க முடியும். குறிப்பாக அமைச்சர்களே பணம் கொடுத்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் உள்ளனர். இதற்காக அதிமுகவில்  உள்ள மேற்கு மண்டல அமைச்சர்கள் இரண்டு பேரிடம் அக்கட்சியின் தலைமை பொறுப்புகள் ஒப்படைதுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு அமைச்சர்கள் மூலம் தான் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் அந்தந்த மாவட்ட  செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பணம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகின.

இதனையடுத்து, ணப்பட்டுவாடாவை கண்காணிக்க வடமாநிலங்களில் இருந்து சிறப்பு தேர்தல் பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. சிறப்பு தேர்தல் பார்வையாளர் விசாரணையின் அடிப்படையில், மேற்கு மண்டல  ஐஜி தினகரன், மத்திய மண்டல ஐஜி ஜெயராம், கோவை மாவட்ட எஸ்பி அருள் அரசு ஆகியோரை அதிரடியாக நேற்று இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அல்லாத பணியிடத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு  மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் மு.வடநேரே மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஷசாங் சாய் நியமினம் செய்துள்ளது.

இதனைபோல், நேற்று கோவை மாவட்ட எஸ்பி அருள் அரசு தேர்தல் அல்லாத பணியிடத்துக்கு மாற்றி உத்தரவிட்ட நிலையில், கோவை மாநகர காவல்துறை துணை ஆணையராக ஜெயச்சந்திரனை (ஐ.பி.எஸ்) நியமித்து தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட எஸ்.பி.கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: