தேர்தல் நேரத்தில் பாதுகாப்பு வழங்க இயலாது!: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு மறுப்பு..!!

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டு 25 வருடகால சிறை வாசத்திற்கு பின்பும் தற்போது வரை சிறையில் இருந்து வருகின்றனர். இதில், மதுரை மத்திய சிறையில் ரவிசந்திரன் உள்ளார். ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் சாதாரண விடுப்பு வழங்கக்கோரி அவரது தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், தனக்கு வயது அதிகமாக இருப்பதால் கண் பார்வையில் பிரச்சனை இருப்பதாகவும் மேலும் விவசாயம் தொடர்பான ஒரு சில ஆவணங்களில் ரவிசந்திரன் கையெழுத்திட வேண்டி இருப்பதால் தனது மகனுக்கு பரோல் வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு தொடர் விசாரணையில் இருந்து வருகிறது. பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசு பரோல் வழங்க மறுப்பு தெரிவித்து வந்தது. கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசானது, பரோல் தொடர்பாக பரிசீலனை செய்து மார்ச் 31ம் தேதிக்குள் உரிய முடிவெடுத்து அவரது தாயாரிடம் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது தமிழக அரசு சார்பாக சிரைத்துறையில் இருந்து ரவிச்சந்திரனின் தாயாருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க முடியாது என திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதால் ரவிச்சந்திரனுக்கு வழிக்காவல் பாதுகாப்பு வழங்க இயலாது.

ரவிச்சந்திரனின் வீடு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் பரோல் வழங்க இயலவில்லை. மேலும் ரவிசந்திரன் தாங்கக்கூடிய இடம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளதால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 1 வருடமாக ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்றத்தில் போராடி வந்த நிலையில், பொருந்தக்கூடிய காரணங்கள் இல்லாமல் சாதாரண காரணங்களை கூறி ரவிச்சந்திரனின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: