வாகன அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் சாலைகளை மேம்படுத்துவது அவசியம்: எம்எல்ஏ சீனிவாஸ்கவுடா தகவல்

கோலார்: கோலார் நகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதற்கு ஏற்ற வகையில் சாலை வசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கோலார் தொகுதி எம்எல்ஏ சீனிவாஸ்கவுடா தெரிவித்தார். கோலார் நகரில் உள்ள மகாத்மாகாந்தி சாலை விரிவாக்க பணியை பூஜை செய்து தொடங்கி வைத்து அவர் பேசும்போது, ``கோலார் நகரில் இதற்கு முன் மக்கள் தொகை மட்டுமில்லாமல் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. 5 கி.மீட்டர் சுற்றளவில் இருந்த நகரின் எல்லை தற்போது, இரு மடங்கு அதிகரித்துள்ளது. தேரஹள்ளி மலை வரை கோலார் நகரின் எல்லை வளர்ச்சி அடைந்துள்ளது. கிராமபுறங்களில் வேளாண் தொழில் பொய்த்துள்ளதால், விவசாயிகள் பிழைப்பு தேடி நகர பகுதிக்கு வருகிறார்கள். இதனால் கோலார் நகரில் மக்கள் தொகை 1.50 லட்சத்தை தாண்டியுள்ளது. மக்கள் தொகையுடன் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதை சமாளிக்க வேண்டுமானால் தற்போதுள்ள சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டியது அவசியமாகும். அதை கருத்தில் கொண்டு சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இரு சாலைகள் விரிவாக்க திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். இவ்வாண்டு கோடை காலம் தொடங்கியுள்ளது. இந்த சமயத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் தவிர்க்க, கடந்த ஜனவரி மாதமே மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கான பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. அதிகம் தட்டுப்பாடு உள்ள கிராமங்களில் புதியதாக போர்வெல் போடப்படுகிறது. டேங்கர் லாரிகள் மூலமும் தண்ணீர் சப்ளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: