வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தற்காலிகமானதே..! துணை முதல்வர் ஓபிஎஸ் அதிரடி பேட்டி..!

சென்னை: வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு தற்காலிகமானதே என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது வன்னியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதில், வன்னியர்களுக்கு தனியாக உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். பின்னர் போராட்டங்களையும் அறிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில் ரயில் மீது தாக்குதல் நடந்தது. பல நாட்கள் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். மேலும் இடஒதுக்கீடு சாதி ரீதியான பழைய கணக்கெடுப்பை வைத்து வழங்கப்பட்டு வருவதால், புதிய கணக்கெடுப்பு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இருந்தும் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட அன்று அவசரம் அவசரமாக மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த 20 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து, வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு பிற்படுத்தப்பட்டோரில் உள்ள மற்ற பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள 98 சாதியைச் சேர்ந்தவர்களுக்கு 9.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டும்தானா என்று கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். தென் மாவட்டங்களில் போராட்டத்தையும் நடத்தினர். தேர்தல் நேரத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பால், தென் மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்கள் பலர் கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் தேர்தல் ஆதாயத்திற்காக எடப்பாடி இப்படி செய்து விட்டதாக மக்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்ய தொடங்கினர். இதனால், குறிப்பிட்ட சமுதாய அமைச்சர்களும் கிராமங்களுக்கு செல்ல முடியவில்லை.

துணை முதல்வரே அவரது தொகுதிக்குள் சென்று பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை உருவானது. அதில், அமைச்சர் உதயகுமார், சில நாட்களுக்கு தனது தொகுதிக்குள் பிரசாரம் செய்ய சென்றார். அவரை கிராம மக்கள் மறித்து, ஊருக்குள் வரவேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய உதயகுமார், இந்த இட ஒதுக்கீடு தற்காலிகமானதுதான் என்று கூறினார். இப்போது அதையே, துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இடஒதுக்கீடு என்பது சாதி ரீதியாக மக்களின் கணக்கெடுப்பு நடத்திய பிறகே, செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஆணையம் அமைக்கப்பட்டு சாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இடஒதுக்கீடு பழைய மக்கள் தொகை கணக்கை வைத்து எடுக்க முடியாது என்று தெரியும்.

எனவே, இதுகுறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வராகியும் நானும் எவ்வளவோ கூறினோம். இருந்தும் வன்னியர்களின் பிரதிநிதியான ராமதாஸ் தற்காலிகமாவது உள் ஒதுக்கீடு கோரினர். அதனாலே தற்காலிகமாக உள் ஒதுக்கீடு செய்தோம். கணக்கெடுப்பிற்கு பிறகு 20 சதவீதத்தில் இருந்து ஒதுக்கப்படுவதே நிரந்தரம். தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த 10.5 சதவீதம் என்பது தற்காலிகமானதே. இது கூடவும் கூடலாம், குறைந்தாலும் குறையலாம். அது சாதிவாரி கணக்கெடுப்பை பொருத்ததே அமையும் என்றார். இதனால், தேர்தல் முடிந்த பிறகு இடஒதுக்கீடு செய்திருக்கலாமே என்ற கேள்விக்கு? தேர்தல் முடிந்த பிறகு, சாதி ரீதியாக கணக்கெடுப்பு முடிந்ததும், இடஒதுக்கீடு செய்யலாம் என்று கூறினோம்.

ஆனால் இதனை எவ்வளவு கூறியும், வன்னியர்களின் பிரதிநிதிகளான பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்றுக்கொள்ளாமல், தேர்தலுக்கு முன்பு, முதலில் தற்காலிகமாக உள் ஒதுக்கீடு செய்யுங்கள் என்றார். அதனாலே செய்யப்பட்டது என்று மீண்டும் உறுதிபடக் கூறினார்.

இதேபோல், இந்த உள்ஒதுக்கீட்டில் சீர் மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் உள்ள மற்ற பிரிவினருக்கு வருத்தம் உள்ளதா என்று கேட்டபோது? ‘‘சீர் மரபினர் மட்டுமில்லாமல், மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் மேலும் 98 சாதியினர் உள்ளனர். மதுரை, திண்டுக்கல், தேனியில் பிரமலை கள்ளர், தேனி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் மறவர்கள் மற்றும் சிரிய பகுதி கள்ளர்கள் உள்ளனர்.

எனவே சீர்மரபினருக்கு வழங்கப்பட்ட 7 சதவீதம், மற்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட 2.5 சதவீதம் எல்லாம் தற்காலிகமானேதே’’ என்றார்.

இதேபோல், தேர்தல் கருத்துக்கணிப்புகள் சில உங்களுக்கு எதிராக வந்துள்ளேதே என்றபோது, ‘‘கருத்துகணிப்புகள் என்பது யார் நடத்துகிறார்கள் என்பதை பொருத்தே உள்ளது, நாங்கள் ஜெயலலிதாவின் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம், பல திட்டங்களை செய்துள்ளோம். உடனுக்குடன் பிரச்னைகளை தீர்ப்பதால் மக்களுக்கு எங்கள் மீது நல்ல நம்பிக்கை உள்ளது. எனவே அதிகப்படியான வெற்றி பெறுவோம். மத்திய, மாநிலம் என இரண்டு அரசுகள் கூட்டணி வைத்துள்ளது. இதையே மக்கள் விரும்புகின்றனர். அதிமுகவில் எந்த குடும்ப அரசியலும் இல்லை, யார் தலையீடும் இல்லை, ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட்டு வருகின்றோம்.

கழக உறுப்பினர்களுக்காக செயல்படுகிறோம்’’ என்றார். வன்னியர் இட ஒதுக்கீடு 40 ஆண்டுகால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று அன்புமணி கூறி வந்தார். இந்நிலையில் தமிழக அரசின் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் இதையே கூறியிருப்பது வன்னியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் இப்படி ஒவ்வொருத்தரும் சர்ச்சையை கிளப்புவதால், இந்த உள் இடஒதுக்கீட்டினால் தேர்தலில் பலனை எதிர்பார்த்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Related Stories: