மீண்டும் ஊரடங்கு வரும் என்று அச்சம்; சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: திருச்சி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்

திருச்சி: கொரோனா பரவல் காரணமாக மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் வடமாநிலத்தவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல திருச்சி ரயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா 2வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. பொது மக்கள்  மாஸ்க் அணியாமல் சகஜமாக வெளியில் சுற்றுவது, சமூக இடைவெளியை பின்பற்றாதது போன்ற அலட்சியத்தால்  கொரோனா தாக்கத்தின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போதிலும் தனிமைப்படுத்திக்கொள்வோர் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 213 உயர்ந்துள்ளது.

தமிழகத்திலும் நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என வதந்திகள் பரவி வருகிறது.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் வாழ்வாதாரத்தை மீண்டும் இழக்க நேரிடுமோ என தமிழக மக்கள் மட்டுமின்றி வட மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் கோவை, கரூர், திருச்சி, புதுக்கோட்ைட, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் வடமாநிலத்தவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கையாக ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளில் உள்ள வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன் தங்களது ஊர்களுக்கு படையெடுக்க துவங்கி விட்டனர்.

அவர்கள் பஸ்கள் மூலம் திருச்சி வந்து ரயிலில் சொந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர். இதனால் திருச்சி ரயில் நிலையத்தில் இன்று மூட்டை முடிச்சுகளுடன் வடமாநிலத்தவர் கூட்டம் அதிகளவில் இருந்தது. அவர்கள் ஹவுரா ரயில் மூலம் தங்களது சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

Related Stories: