சித்தூர் கலெக்டர் அலுவலக பின்புறத்தில் ₹2 கோடி மினி டிராக்டர், பொக்லைன்கள் கேட்பாரின்றி கிடக்கும் அவலம்-அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலக பின்புறத்தில் ₹2 கோடி மதிப்புள்ள மினி டிராக்டர் மற்றும் பொக்லைன்கள் கேட்பாரின்றி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியில்  கடந்த 2019ம் ஆண்டு மினி ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்கள் வழங்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ₹2 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டு, மொத்தம் 186 மினி ஜேசிபி மற்றும் மினி டிராக்டர்கள் புதிதாக வாங்கப்பட்டது. இந்த இயந்திரங்கள் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் மிகவும் குறுகியதாக இருக்கும் சாலைகளின் பணிக்காக வாங்கப்பட்டது.

ஆனால், புதிதாக வாங்கப்பட்ட இயந்திரங்கள் அந்தந்த பஞ்சாயத்துகளுக்கு அனுப்புவதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இறக்குமதி செய்யப்பட்டது. ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் இந்த இயந்திரங்கள் வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இந்நிலையில், அதற்குள் ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வந்தது. இதனால், அதிகாரிகள் அந்த இயந்திரங்களை பஞ்சாயத்துகளுக்கு அனுப்பவில்லை.

ஏனென்றால், தேர்தல் விதிமீறல்கள் இருப்பதால் அதிகாரிகள் பஞ்சாயத்துகளுக்கு இயந்திரங்களை அனுப்பாமல் இருந்தனர்.

அந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்று முதல்வராக ஜெகன்மோகன் பதவியேற்றார். ஆனால், தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் வாங்கிய இயந்திரங்களை அந்தந்த பஞ்சாயத்துகளுக்கு அனுப்ப அதிகாரிகளுக்கு ஆளும் கட்சி அரசு உத்தரவிடவில்லை. இதனால், இயந்திரங்கள் அனைத்தும் சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்புறத்தில் துருப்பிடித்து மக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட இயந்திரங்கள் கேட்பாரின்றி 2 ஆண்டுகளுக்கும் மேலாகி துருபிடித்து மழையிலும் வெயிலிலும் காய்ந்து மக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிதாக வாங்கிய இயந்திரங்களை சரி செய்து அந்தந்த பஞ்சாயத்துகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: