திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 55,686 பக்தர்கள் சுவாமி தரிசனம்-₹3.15 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 55 ஆயிரத்து 686 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில், ₹3.15 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆன்லைன் மூலமாக 25 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், இலவச நேர ஒடுக்கீடு தரிசன டோக்கன் 25 ஆயிரம் உள்ளிட்டவை பெற்ற பக்தர்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற்ற 2 ஆயிரம் பக்தர்கள், நன்கொடையாளர்கள் ஆயிரம் என தரிசன டிக்கெட் உள்ளவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.அலிபிரி பாதயாத்திரை வழியாக காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமேட்டு பாதயாத்திரை வழியாக காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்து வைக்கப்படுகிறது. 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தரிசன டிக்கெட் பெற்றிருந்தால் மட்டுமே தரிசிக்க முடியும்.

தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீவாரி உண்டியலில் பணம் மற்றும் நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். சிலர் கோயிலுக்கு பணம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். மேலும், பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் 55 ஆயிரத்து 686 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதில், 25 ஆயிரத்து 333 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். மேலும், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ₹3.15 கோடி காணிக்கையாக கிடைத்தது.

Related Stories: