தமிழகத்தில் 88,937 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு; அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு பேட்டி

சென்னை: அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பாக கடந்த பிப்ரவரி 26ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்ட குழு மாநிலம் முழுவதும் சோதனை நடத்தி வருகிறது. இதனிடையே தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.

அதே நேரத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 4ம் தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. தேர்தல் நெருங்கி வரும் அதே வேளையில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; தமிழகத்தில் 88,937 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் 1,55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்களின் எண்ணிக்கை 1,14,205. வி.வி.பேட் இயந்திரங்களின் எண்ணிக்கை 1,20,807. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும். ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யப்படும்.

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களில் 89,185 பேர் அஞ்சல் மூலம் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரூ.319.02 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதிகப்படியாக சேலத்தில் 44.47 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

Related Stories: