நீர்வரத்து ஓடையை ஆக்கிரமித்து வீடு கட்டி வாடகைக்கு விடும் அதிமுக மாஜி கவுன்சிலர்-கம்பத்தில் பொதுமக்கள் பரபரப்பு புகார்

கம்பம் : கம்பத்தில் உள்ள கம்பமெட்டு ரோடு காலனியைச் சேர்ந்தவர் ஒச்சு. இவர், 11வது வார்டு அதிமுக மாஜி கவுன்சிலர். இவர், நகரில் நீர்வரத்து ஓடையான சேனை ஓடையை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி வாடகைக்கு விடுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் யாசர் அரபாத் கூறியதாவது: கம்பம் நகரில் செல்லும் சேனை ஓடை முன்பு நீர்வரத்து ஓடையாக இருந்தது. இந்த ஓடைப்பகுதியை 11வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஒச்சு ஆக்கிரமித்து வீடுகளை கட்டி வாடகைக்கு விடுகிறார்.

இவர், ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மழை காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், இந்த வீடுகளில் குடியிருக்கும் ஏழை மக்களின் நிலை ஆபத்தானது. மேலும், ஓடை வழித்தடத்தில் வீடுகள் கட்டக்கூடாது என்ற அரசின் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. இது குறித்து பல முறை புகார் அளித்தும் அரசு அதிகாரிகள் தரப்பில் எவ்வித பிரயோஜனமும் இல்லை’ என்றார்.

இது குறித்து மாஜி கவுன்சிலர் ஒச்சுவிடம்  கேட்டபோது, ‘இந்த இடத்தில் வீடு கட்டியதற்கு, அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட பட்டா உள்ளது’ என்றார். ஆனால், பல முறை கேட்டும் பட்டாவை காண்பிக்கவில்லை. நீர்வழித்தடத்திற்கு பட்டா இருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் பொதுமக்கள்.

Related Stories: