மதுரையில் பயங்கரம் சிலிண்டர் வெடித்ததில் தனியார் ஊழியர் சாவு-தற்கொலையா என போலீசார் விசாரணை

மதுரை : மதுரையில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் தனியார் நிறுவன கணக்காளர் பலியானார். இவர் சிலிண்டரை வெடிக்க வைத்து, தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை பாலரெங்கபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (43). தனியார் நிறுவன கணக்காளர். திருமணமாகாத இவர், தனது தாயாருடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 1 மணியளவில் திடீரென இவரது வீட்டில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. வீட்டில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறியது.

அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். வீட்டின் சமையலறை சுவர் இடிந்து கிடந்ததுடன், அறையிலிருந்த காஸ் சிலிண்டர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அருகில் தீக்காயங்களுடன், இடிபாடுகளுக்கிடையே சரவணன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அனுப்பானடி தீயணைப்பு நிலையம் மற்றும் தெப்பக்குளம் காவல்நிலையத்திற்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு அலுவலர் உதயகுமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தீ மேலும் பரவாமல் தடுத்து, உடனடியாக அணைத்தனர்.

மற்றொரு அறையில் இருந்த சரவணின் தாயார் அதிர்ஷ்டவசமாக விபத்தில் காயமடையவில்லை. தெப்பக்குளம் போலீசார் அவரிடமும், அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் சரவணின் உடலை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சமீபகாலமாக கணக்கு எழுதும் பணி சரிவர கிடைக்காததால், சரவணன் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காஸ் சிலிண்டரை திறந்து தீவைத்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது சிலிண்டர் வெடித்ததில் அவர் உயிரிழந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்விபத்தில் அருகில் உள்ள திருமண மண்டபத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டுச்சுவர் சேதமடைந்தது. மேலும் மண்டபத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட டூவீலர்கள் எரிந்து நாசமடைந்தன.

Related Stories: