திருவலம் அடுத்த அரும்பருதியில் அவலம் சமூக விரோதிகள் கூடாரமாக மாறிய கிராம ஊராட்சி அலுவலகம்-அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவலம் : திருவலம் அடுத்த அரும்பருதியில் சமூக விரோதிகள் கூடாராமாக கிராம ஊராட்சி அலுவலகம் மாறியுள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, திருவலம் அடுத்த அரும்பருதி கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியினரின் நிர்வாக பயன்பாட்டிற்காக காட்பாடி- திருவலம் சாலையோரம் ஊராட்சி அலுவலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஊராட்சி அலுவலகம் சரிவர பராமரிப்பின்றி அலுவலகம் எதிரே பழைய சாமான் கடைகளில் உள்ளது போன்று குப்பை வண்டிகள் பராமரிப்பு இன்றி ஓரங்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலக வளாகத்தில் தினமும் காலை முதல் இரவு வரையில் ஒரு சில சமூக விரோதிகள் மது அருந்துவதற்கும், புகைப்பிடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.  இதனால், சமூக விரோதிகளின் கூடாரமாக ஊராட்சி அலுவலகம் மாறியுள்ளது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள், முதியவர்கள் தங்களுக்கான பல்வேறு பணிகளுக்காக ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்ல பெரும் அச்சம் அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட அரும்பருதி ஊராட்சி செயலரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லையாம். மேலும் இந்த கிராமத்தில் இறந்தவர்களுக்கான சடங்குளை செய்ய கட்டப்பட்டுள்ள காரிய மேடை அறையில் உள்ள  தண்ணீர் தொட்டியில் இணைக்கப்பட்டுள்ள குழாய் உடைந்து பல மாதங்களாகியும் சீரமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாகவும் அதனால் தண்ணீர் வீணாவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: