வங்கதேசத்துக்காக சிறை சென்றேன்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

தாகா: வங்கதேசத்தின் சுதந்திரத்துக்காக சிறை செல்லும் வாய்ப்பு கிடைத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு பின் சுமார் ஒரு ஆண்டு கழித்து பிரதமர் மோடி முதல் முறையாக வெளிநாட்டு பயணத்தை தொடங்கி உள்ளார். 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று அவர் வங்கதேசம் சென்றார். ஹஸ்ரத் ஷாஜாலால் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நேரில் வந்து வரவேற்றார். பின்னர், கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த வங்கதேச சுதந்திர போரில் உயிர் நீத்த வங்கதேச வீரர்களின் நினைவிடத்துக்கு சென்று மோடி அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, இந்த நினைவிடத்தில் வெண்மருது மரக்கன்றை அவர் நட்டு தண்ணீர் ஊற்றினார். பின்னர், தாகாவில் நடந்த வங்கதேசத்தின் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அந்த விழாவில் பேசிய மோடி, “இந்த பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  இந்தியா - வங்கதேச நட்பு 50 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த  நேரத்தில் வங்கதேச நிறுவன தந்தை ேஷக் முஜிபுர் ரஹ்மானுக்கு அஞ்சலி  செலுத்துகிறேன். எனது அரசியல் பயணத்தில் வங்கதேச சுதந்திர போராட்டம் முக்கிய இடம் பிடித்துள்ளது. வங்கதேசத்தின் சுதந்திரத்துக்காக இந்தியாவில் நடத்தப்பட்ட சத்தியாகிரக போராட்டத்தில் நானும், எனது சகாக்களும் பங்கேற்று சிறை சென்றோம். அப்போது, எனக்கு 20 வயதிருக்கும். எனது அரசியல் பயணத்தில் நான் பங்கேற்ற முதல் போராட்டமும் இதுதான். அதை நான் பெருமையாக கருதுகிறேன் ,’’ என்றார்,

சிறப்பு விமானத்தில் முதல் முறை பயணம்

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 777 விமானம், பிரத்யேகமாக ₹4 ஆயிரம் கோடி செலவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதை ஏவுகணையாலும் தகர்க்க முடியாது. இந்த விமானத்தில் மோடி முதல் முறையாக தனது வெளிநாட்டு பயணமாக வங்கதேசம் சென்றார்.

Related Stories: