கொசஸ்தலை ஆற்றில் மேம்பாலம்: மாதவரம் எஸ்.சுதர்சனம் உறுதி

புழல்: மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், சோழவரம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்தூர், பூதூர், புதிய எருமைவெட்டிபாளையம், பழைய எருமைவெட்டிபாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் மலர்தூவி, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். கிராமங்களில், 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்களிடம் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது மாதவரம் எஸ்.சுதர்சனம் பேசுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளில் இந்த தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். தொடர்ந்து வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

திமுக ஆட்சி அமைந்தவுடன் நீங்கள் செய்யும் 100 நாள் வேலையை 150 நாளாக மாற்றுவதுடன், சம்பள உயர்வும் வழங்கப்படும். மாதம்தோறும் நியாயவிலை கடையில் ரூ.1000 வழங்கப்படும். பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும். பழைய எருமைவெட்டிபாளையம் - எடப்பாளையம் இடையே உள்ள கொசஸ்தலை ஆற்றில் மேம்பாலம் கட்டித்தரப்படும்,’ என்றார். பிரசாரத்தின்போது, சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கருணாகரன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: