டெல்லியில் கவர்னருக்கு அதிகாரம்: மோடிக்கு மாற்றாக கெஜ்ரிவால் உருவாவதை விரும்பவில்லை: சிசோடியா கருத்து

புதுடெல்லி: டெல்லியில் கவர்னருக்கு அதிகாரம் அளிக்கும் விவகாரத்தில் கருத்து தெரிவித்த சிசோடியா,’ மோடிக்கு மாற்றாக கெஜ்ரிவால் உருவாவதை மத்திய அரசு விரும்பவில்லை’ என்று கருத்து தெரிவித்தார்.டெல்லியில் கவர்னருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இந்த மசோதா நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம் டெல்லி அரசாங்கம் என்றால் அது கவர்னர்தான். சட்டசபை அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி நேற்று துணை முதல்வர் சிசோடியா கூறியதாவது: பிரதமர் மோடிக்கு மாற்றாக முதல்வர் கெஜ்ரிவால் உருவாவதை விரும்பவில்லை என்பது மத்திய அரசு கொண்டு வந்த டெல்லி சட்டத்திருத்த மசோதா மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும் டெல்லி மசோதா விவகாரத்தில் சட்டக்கருத்து கேட்டு பெறப்பட்டு முடிவு எடுக்கப்படும். ஏனெனில் டெல்லி மாடல் ஆட்சி இப்போது நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தான் மோடிக்கு மாற்றாக முதல்வர் கெஜ்ரிவால் உருவாவதை மத்திய அரசு விரும்பவில்லை. இதனால்தான் டெல்லி சட்டத்திருத்த மசோதா மூலம் தேர்வு செய்யப்பட்ட அரசை பலம் குறைவானதாக மாற்றி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: