ஜாதி, மதச்சண்டை இல்லாத ஆட்சியை நடத்தியிருக்கிறோம்; தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பிரசாரம்

மதுரை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நேற்று துவக்கினார். சேலத்திலிருந்து, கரூர் வழியாக திண்டுக்கல் வந்த முதல்வர், இம்மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் நேற்றிரவு 10.35 மணிக்கு அவர் மதுரை வந்தார். அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இரவு தங்கினார். இன்று காலை 10 மணிக்கு ஒத்தக்கடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஜாதி, மதச்சண்டை இல்லாத சட்டத்தின் ஆட்சியை நடத்தியிருக்கிறோம். ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களுக்கு உயிரோட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், 52 லட்சத்து 21 ஆயிரம் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக  வாழ்கின்றனர். குடிமராமத்து பணிகளை செய்து ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. மின்மிகை மாநிலமாக தமிழகத்தை கொண்டு வந்திருக்கிறோம்.

இதுவரை 304 தொழிற்சாலைகள் கொண்டு வர புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 5.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்திருக்கிறோம். இவர்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.  புதிதாக தொழில் துவங்கும் திட்டத்தின் மூலம் ரூ.28 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. முதியோருக்கான உதவித்தொகை உயர்த்தப்படும். ஓட்டுனர் உரிமத்தை அரசே பெற்றுத் தரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: