ஆங்கில தொலைக்காட்சி நடத்திய 2வது கருத்துக்கணிப்பு முடிவு தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி

* 177 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும்

* நாளுக்கு நாள் மக்களிடம் ஆதரவு அதிகரிப்பு

* அதிமுக கூட்டணி 50 இடம் கூட தாண்டாது

புதுடெல்லி: ஆங்கில தொலைக்காட்சியான டைம்ஸ் நவ் மற்றும் சி ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், தமிழகத்தில் திமுக கூட்டணி 177 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிய வந்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு வெறும் 49 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றில் அனைத்து கணிப்புகளிலும் தமிழகத்தில் திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டு வருகிறது. கடந்த 8ம் தேதி வெளியிடப்பட்ட டைம்ஸ் நவ்  சி ஓட்டர் கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 158 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்றும், அதிமுக-பாஜ கூட்டணி 65 இடங்களை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் நெருங்கிய நிலையில், அனல் பறக்கும் பிரசாரங்கள் நடந்து வரும் நிலையில், கடந்த 17ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலான காலகட்டத்தில் டைம்ஸ் நவ் -  சி ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிட்டப்பட்டன. இதில், திமுக கூட்டணி முன்பு கணிக்கப்பட்டதை விட அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது. முந்தைய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 158 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது இன்னும் 29 அதிகரித்து 177 இடங்களுடன் அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதே சமயம் அதிமுக-பாஜ கூட்டணி வெறும் 49 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்திக்கும் என கூறப்பட்டுள்ளது.  

ஒவ்வொரு மண்டலமாக நடத்தப்பட்டுள்ள கணிப்பில், சென்னை மண்டலத்தில் 16 இடங்களில் திமுக கூட்டணி 11 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் 52 இடங்களில் திமுக 38 இடங்களிலும், அதிமுக 12 இடங்களிலும் மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் திமுக கூட்டணிக்கு 31 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக 9 இடங்களையும், அமமுக 1 இடத்திலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.வடக்கு மண்டலத்தில் 47 இடங்களில் திமுக 39 இடங்களையும், அதிமுக 7 இடங்களையும், மற்ற கட்சிகள் ஒரு இடத்தையும் கைப்பற்றும். கடந்த 2016 தேர்தலில் திமுக கூட்டணியின் வாக்கு விகிதம் 39.4% இருந்த நிலையில், 2021 தேர்தலில் 46% ஆக, அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.  2016ல் 43.7% வாக்குகளை வென்ற அதிமுக கூட்டணி இம்முறை 34.6% வாக்கை மட்டுமே பெறும் என கூறப்பட்டுள்ளது.

முதலிடத்தில் ஸ்டாலின்

மக்களை கவர்ந்த முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர வேண்டுமென கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 43.1% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு 29.7% சதவீத ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. மநீம தலைவர் கமல்ஹானுக்கு

4.8 சதவீதம் பேரும், ஓபிஎஸ்.க்கு 1.7% பேரும் ஆதரவு தந்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் மக்கள் கடும் அதிருப்தி

* மத்தியில் பாஜ தலைமையிலான அரசு மீதும், தமிழகத்தில் அதிமுக அரசு மீதும் கருத்துக் கணிப்பில் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

* பாஜ தலைமையிலான மத்திய அரசு மீதான திருப்தி குறித்த கருத்துக்கணிப்பில் 50.38% சதவீதம் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

* மாநில அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்கு 38.8% பேர் அதிருப்தியும், 36.37% பேர் ஓரளவுக்கு திருப்தி என்றும் கூறி உள்ளனர்.

* முதல்வர் எடப்பாடியின் செயல்பாடு குறித்த கேள்விக்கு 36.51% பேர் திருப்தி இல்லை என்று கூறி உள்ளனர்.

Related Stories: