தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்: பொதுமக்கள் 70 பேர்; “ஒரே ஒரு காவலர் மட்டுமே குற்றவாளி”.. சிபிஐ குற்றச்சாட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் 2018 மே 22-ல் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 71 பேர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு ஆண்டு குமரெட்டியாபுரம் பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டத்தை துவக்கினர். இந்த போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில் அருகில் உள்ள பண்டாரம்பட்டி, மீளவிட்டான், மடத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 13 கிராமங்களுக்கும் பரவியது.99 நாட்களை கடந்த நிலையில் 100வது நாளில் போராட்டக்குழுவினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட தீர்மானித்தனர்.

இந்நிலையில் போராட்டக் குழுவினரை மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதில் போராட்ட குழுவில் ஒரு பகுதியினர் மட்டும் கலந்து கொண்டு விட்டு தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே ஒருநாள் முழுவதும் தர்ணா நடத்திக் கொள்வதாக உறுதியளித்தனர். ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளாமல் தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டுச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர்.  

இந்த துப்பாக்கி சூட்டில் லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த கிளாஸ்டன், மினிசகாயபுரத்தைச் சேர்ந்த ஸ்நோலின், தாமோதரநகரைச் சேர்ந்த மணிராஜ், குறுக்குசாலை தமிழரசன், மாசிலாமணிபுரம் சண்முகம், அன்னை வேளாங்கன்னிநகர் அந்தோணிசெல்வராஜ், புஷ்பாநகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார், மில்லர்புரம் கார்த்திகேயன், திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஜான்சி, சிவந்தாகுளம் ரோடு கார்த்திக், மாப்பிள்ளையூரணி காளியப்பன், உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன், சாயர்புரம் செல்வசேகர் ஆகிய 13 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இது தமிழகம் மட்டுமின்றி நாட்டையே ஒரு அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது விசாரணை செய்த நீதிபதிகள் இந்த வழக்கை உடனடியாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ சார்பாக ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த வழக்கில் எத்தனை பேர் குற்றவாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என குற்றப்பத்திரிக்கையை கடந்த மாதம் தாக்கல் செய்துள்ளனர். அந்த குற்றப்பத்திரிகையின் நகல் தற்போது வெளியாகியுள்ளது.

அதில்; 71 நபர்களை குற்றவாளிகளாக சேர்த்து சிபிஐ போலீசார் சிபிஐ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த 71 பேரில் ஒரு காவலர் மட்டும் தான் குற்றவாளியாக செக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஏனென்றால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடக்கிறது. ஆங்காங்கே இருந்த காவலர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 234 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்பது தான் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு. இந்நிலையில் இந்த குற்றப்பத்திரிக்கையில் ஒரு காவலர் பெயர் தான் இடம்பெற்றுள்ளது என்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.

Related Stories: