வருமான வரித்துறை, தேர்தல் ஆணையத்தின் கண்ணை மறைத்து 2 அமைச்சர்கள் மூலம் பணம் விநியோகம் முடிந்தது: பெயருக்கு வேறு இடங்களில் சோதனை நடத்தி மக்களை திசை திருப்பியது அம்பலம்

சென்னை: வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் கண்ணை மறைத்து, மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் மூலம் மாநிலம் முழுவதும் மாவட்டச் செயலாளர்களிடம் தொகுதிக்கு 12 கோடி வீதம் பணம் விநியோகம் முடிந்தது. போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் திங்கட்கிழமை முழுவதும் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பணம் எடுத்துச் செல்வதை திசை திருப்புவதற்காக வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்திய தகவலும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான மற்றொரு கூட்டணியும் மோதுகின்றன. இவர்களை தவிர மநீம, டிடிவி. தினகரன், நாம் தமிழர் கட்சி ஆகியவையும் களத்தில் இறங்கியுள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் திமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. திமுக தனித்தே ஆட்சியைப் பிடிக்கும். திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும். அதிமுக கூட்டணி குறைந்த இடங்களையே பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்தன.

இதனால் தமிழகத்தில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே அதிமுகவை கைப்பற்ற முடியும். இல்லாவிட்டால் அதிமுகவை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், டிடிவி.தினகரன் தலைமையில் சசிகலா மறைமுகமாக காய் நகர்த்தும் ஒரு அணியும் காத்திருக்கின்றன. இதனால் ஆட்சியைப் பிடிப்பதை விட கட்சியை கைப்பற்றுவதே எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது முக்கியமான சவாலாக உள்ளது.இதனால், தமிழகம் முழுவதும் அதிமுக எதிர்ப்புகளை பணம் கொடுத்து சமாளித்து விடலாம் என்று ஆளும்கட்சி கருதுகிறது. குறிப்பாக விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு, வேளாண் விளைபொருட்களின் விலை உயர்வு என்று எந்தப் பொருளை எடுத்தாலும் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது.

இதனால் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி வருகின்றனர் என கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. இதை சரிக்கட்ட தொகுதிக்கு 12 கோடி வரை செலவு செய்ய ஆளும் தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆட்சி முடியும் கடைசி நாட்களில் ஒவ்வொரு அமைச்சருக்கும், கட்சி நிதியை வசூலிக்கும்படி மேலிடம் உத்தரவிட்டதாம். இதன்படி அவர்கள் வசூலித்து மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 2 அமைச்சர்களிடம் வழங்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த 2 அமைச்சர்களும் கூடுதல் பணத்தைப் போட்டு சேகரித்து வைத்திருந்தனர். அந்தப் பணத்தை விநியோகிக்கும்படி கட்சித் தலைமை தற்போது உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அதிமுக மாவட்டச் செயலாளர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கு மண்டலத்தில் உள்ள 2 அமைச்சர்களை சந்திக்கும்படி உத்தரவுகள் பறந்தன. தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் 3 முதல் 5 கார்களில் கோவையில் முகாமிட்டிருந்தனர்.

அவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வரும்படி அழைப்புகள் வந்தன. அந்த நேரத்தில் அமைச்சர்களை சந்தித்த மாவட்டச் செயலாளர்களிடம் தொகுதி செலவுக்கு 10 கோடியும், வேட்பாளரின் செலவுக்கு 2 கோடியும் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. தங்கள் எல்லைக்கு உட்பட்ட தொகுதிக்கான பணத்தை மாவட்டச் செயலாளர்கள் வாங்கியதும் அவர்களுக்கு பாதுகாப்புக்காக மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த போலீசாரும் ஒதுக்கப்பட்டனர்.போலீஸ் பாதுகாப்புடன் தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பணம் சொந்த மாவட்டங்களுக்கு வந்து சேர்ந்தன. அந்தப் பணம் தற்போது மாவட்டச் செயலாளர்களின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.இவர்கள் வரும் வழியில் சோதனை நடத்தக்கூடாது என்பதற்காக பணம் கொண்டு செல்லும் வழிகளும் அமைச்சர்களால் மாவட்டச் செயலாளர்களிடம் வழங்கப்பட்டது. அந்த சாலைகளில் மட்டுமே பணத்தை எடுத்துச் சென்றனர்.

அந்த நேரத்தில் போலீசார் எங்குமே சோதனையிடக் கூடாது என்றும் உத்தரவுகள் பறந்தன. இதனால் போலீசாரும், சிறப்பு படையினரும் வேறு இடங்களில் பொதுமக்களின் வாகனங்களை சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் பணம் பாதுகாப்பாக போய் சேர்ந்தது.தற்போது மாவட்டச் செயலாளர்களிடம் உள்ள பணம் இனி தொகுதிகளில் உள்ள ஒன்றிய நிர்வாகிகளுக்கு பிரித்து அளிக்கப்பட உள்ளது. ஒரு ஒன்றியத்துக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும், பூத்துக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும், பிரசாரத்துக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும், வேட்பாளருக்கு வழங்கப்பட்ட 2 கோடியை எப்படி செலவு செய்ய வேண்டும் என்று அறிக்கையும் மாவட்டச் செயலாளர்களிடம் வழங்கப்பட்டது. அந்த திட்டத்தின்படி மாவட்டச் செயலாளர்கள் பணத்தை விநியோகம் செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகளில் கடந்த இரு நாட்களாக ஈடுபட்டுள்ளனர்.

வருமானவரித்துறை, தேர்தல் ஆணையத்தின் கண்ணை மறைத்து விட்டு ஆளும் கட்சி பணத்தை வெற்றிகரமாக கொண்டு சென்றது. தற்போது கடந்த இரு நாட்களாக ஆளும் கட்சியினரின் பணம் கொஞ்சம் கொஞ்சமாக செலவு செய்யப்பட்டு வருகிறது. ஓரிரு நாளில் பணம் முழுமையாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல் ஆணையம் முழுமையாக செயல்படவில்லை. ஆளும் கட்சிக்கு உடந்தையாக இருக்கும் போலீஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த பண விநியோகம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: