கோயம்பேடு மார்க்கெட்டில் மாஸ்க் அணிவதை கண்காணிக்க பறக்கும் படை: சிஎம்டிஏ அதிரடி நடவடிக்கை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் கொரோனா பரவலை தடுக்க, வியாபாரிகள் உள்பட அனைவரும் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க சிஎம்டிஏ நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து  பறக்கும் படை அமைத்துள்ளது. சென்னை நகரின் மையப் பகுதியில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று வேகமாக பரவியது. மேலும், இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் வியாபாரிகள் மற்றும் மக்கள் மூலமாக அதிகரித்தது. இதைத்  தொடர்ந்து மார்க்கெட் மூடப்பட்டது. பின்னர் 8 மாதங்கள் கழித்து, கோயம்பேடு மார்க்கெட் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

சென்னை நகரில் தற்போது 2-வது கட்டமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, அனைத்து மக்களும் மாஸ்க், அடிக்கடி கை, கால் கழுவுதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக  இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி, திரவம் கொண்டு கைகளை கழுவுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை சிஎம்டிஏ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, சமீபகாலமாக கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை முறைாயக கடைப்பிடிப்பதில்லை என புகார் எழுந்தது. இவற்றை  தடுக்கும் வகையில், கோயம்பேடு மார்க்கெட்டில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களை கண்காணித்து அபராதம் விதிக்க, பறக்கும் படை ஒன்றை அமைத்து சிஎம்டிஏ நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், கோயம்பேடு மார்க்கெட் நுழைவுவாயில் மற்றும் அதன் உட்புறங்களிலும் கொரோனா நோய்தொற்று பரவல் தடுப்பு விழிப்புணர்வு பதாகைகள் வைத்துள்ளனர். இதுதவிர, ஒரு வேனில் பறக்கும் படையினர் மார்க்கெட்டு பகுதிக்குள் சுற்றி  வந்து, மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். கண்காணிப்பு பணியில் ஈடுபடும் 70-க்கும் மேற்பட்ட காவலாளிகளுக்கு வாக்கிடாக்கி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 

மேலும், மார்க்கெட்டில் எந்தெந்த பகுதிகளில் மாஸ்க், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை என பறக்கும் படையினர் மூலம் கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் சிஎம்டிஏ நிர்வாகம் களமிறங்கியுள்ளது.  கடந்த ஆண்டை போல் இங்கு கொரோனா பரவல் அதிகரிப்பை தடுக்க, தற்போது மார்க்கெட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: