எதையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்..: தேர்தல் தோல்விக்கு பயந்து என்னை கொல்ல முயற்சி.... அமைச்சர் கடம்பூர் ராஜூ புகார்

கோவில்பட்டி: தேர்தல் தோல்விக்கு பயந்து என்னை கொல்ல முயற்சி நடப்பதாக அமமுகவினர் மீது அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு புகார் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் நேற்று இரவு ஒரே நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இரு கட்சியினரும் அருகருகே திரண்டிருந்ததால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. அப்போது, அ.ம.மு.க. வேட்பாளர் தினகரன் வருகை தருவதாக தகவல் கிடைத்ததும், அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு தனது காரில் ஏறி புறப்பட்டார். அமைச்சரின் கார் மந்தித்தோப்பு சாலையில் வந்த போது அவரது கார் மீது சரவெடி பட்டாசு கொளுத்திப் போட்டது.

அந்த பட்டாசு அமைச்சரின் கார் அருகில் விழுந்து சரமாரியாக வெடித்தது. அமைச்சரின் கார் ஓட்டுனர் சாமர்த்தியமாக காரை முன் கூட்டியே நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனால் அமைச்சர் கார் அருகில் நின்றிருந்த பலருக்கும் பட்டாசு வெடித்ததில் காயம் ஏற்பட்டது. இரு கட்சியினரும் அங்கு திரண்டதால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் கூட்டத்தை கலைத்து அமைச்சரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, தேர்தல் தோல்விக்கு பயந்து என்னை கொல்ல முயற்சி நடப்பதாக அமமுகவினர் மீது  பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.  நேற்றிரவு அமமுகவினர் எனது காரை வழிமறித்தனர். தடுத்து நிறுத்தி என் கார் மீது அமமுகவினர் வெடிகளை எறிந்தனர். மேலும் எதையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: