திண்டுக்கல்லில் பரபரப்பு அமைச்சரின் பிரசாரத்திற்காக அழைத்து வந்த பெண் மயக்கம்: கண்டும், காணாமல் சென்ற திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண் திடீரென மயங்கி விழுந்தார். இதனை அவர் கண்டும், காணாமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏவும், அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். இவரது தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, கொரோனா கட்டுப்பாட்டை மீறி கூட்டம் சேர்ப்பது, வாகனங்களில் ஆட்களை அதிகளவில் அழைத்து வருவது என தொடர் விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று திண்டுக்கல்லில் உள்ள நேருஜி நகர் பூங்கா, பிள்ளையார்பாளையம், சமயபுரம் மாரியம்மன் கோயில் ரோடு, கிருஷ்ணராவ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் திண்டுக்கல் சீனிவாசன் பிரசாரம் செய்தார். கிழக்கு கோவிந்தாபுரத்தில் பிரசாரத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண் ஒருவர் வெயில் கொடுமை தாங்காமல் மயக்கமடைந்து கீழே விழுந்தார். ஆனால் திண்டுக்கல் சீனிவாசன் அதை கண்டும், காணாமல் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் அங்கிருந்த பெண்கள், அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அமைச்சர் மயங்கிய பெண் குறித்து எதுவும் கேட்காமல் சென்றதால் அங்கிருந்த பலரும் ஆதங்கப்பட்டு, பிரசாரத்தை பாதியிலே கைவிட்டு வீட்டிற்கு நடையை கட்டினர். மேலும் சீலப்பாடி கொத்தம்பட்டி பகுதியில் நடந்த பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி சிறுவர்களை அதிமுக கொடியுடன் அணிவகுத்து நிற்க வைத்திருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

டோக்கன் கொடுத்தா பணம் திண்டுக்கல் சீனிவாசன் பிரசாரத்தில் கூட்டம் சேர்ப்பதற்காக தினந்தோறும் 100க்கும் மேற்பட்டோரை அழைத்து வருகின்றனர். இவர்களுக்கு டோக்கன் முறையில் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. இது தவிர பொங்கல், டீ சாப்பிடவும் டோக்கன் முறையே பயன்படுத்துகின்றனர்.

அமைச்சரிடம் ரூ.43 லட்சம் மனைவியிடம் ரூ.7 கோடி

திண்டுக்கல் சீனிவாசன் வேட்புமனு தாக்கலின்போது அவருடைய சொத்து விவரம் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார். அதில் அவருக்கு கையிருப்பு ரொக்கம் ரூ.2 லட்சம், 5 வங்கி கணக்குகளில் ரூ.36 லட்சத்து 71 ஆயிரத்து 690, 20 கிராம் தங்க நகைகள், ரூ.4 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு என ரூ.43 லட்சத்து 56 ஆயிரத்து 291 மதிப்பில் சொத்து இருப்பதாகவும், அவருடைய பெயரில் வீடு, நிலம், வாகனங்கள் எதுவும் இல்லை எனவும் கூறப்பட்டு உள்ளது. அவருடைய மனைவி நாகேஸ்வரியிடம் கையிருப்பு ரொக்கம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், வங்கி கணக்கில் ரூ.16 லட்சத்து 61 ஆயிரத்து 560, 450 கிராம் நகைகள், ரூ.9 லட்சத்து 77 ஆயிரத்து 278 மதிப்பில் ஆயுள் காப்பீடும், 25 ஏக்கர் விவசாய நிலம், 2 வீடுகள் உள்ளன. இதன்மதிப்பு ரூ.6 கோடியே 84 லட்சத்து 91ஆயிரத்து 360 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: