தஞ்சை மாவட்டத்தில் 3 ஆசிரியர், 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: 2 பள்ளிகளுக்கு அபராதம் விதிப்பு

தஞ்சை: தஞ்சையில், நேற்று 3 ஆசிரியர், 29 மாணவர்கள் உள்பட 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா விதிகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருந்ததாக 2 பள்ளிகளுக்கு கலெக்டர் அபராதம் விதித்துள்ளார்.

தஞ்சையில் கடந்த 8ம் தேதி அம்மாபேட்டையில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளியில் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் பரிசோதிக்கப்பட்டது. இதில் 58 மாணவிகள், ஒரு ஆசிரியர், 9 பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் பட்டுக்கோட்டையில் உள்ள பள்ளி மாணவர்கள் சிலருக்கும், ஆலத்தூரில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு பயிலும் 1,118 மாணவ, மாணவிகளுக்கும் பரிசோரதனை செய்யப்பட்டது. இதில் நேற்று முன்தினம் 21 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் தஞ்சை தனியார் பல்கலைகழக மாணவர்கள் 2 பேருக்கும் தொற்று உறுதியானது. தொடர்ந்து நேற்று 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 129ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் அலட்சியமாக செயல்பட்டதாக கும்பகோணம் தனியார் மேல்நிலை பள்ளிக்கு ரூ.12ஆயிரம் அபராதமும், தஞ்சையில் உள்ள தனியார் பள்ளிக்கு ரூ.5000 அபராதமும் விதித்ததுடன் 2 பள்ளி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.

Related Stories: