பட்டா கோரிக்கையை நிறைவேற்றுவேன்: என்.ஆர்.தனபாலன் வாக்குறுதி

சென்னை: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுகிறார். இவர், தினமும் தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று கொடுங்கையூர் சின்னான்டி மடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  என்.ஆர்.தனபாலன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில்,  ‘‘பெரம்பூர் தொகுதியை பொறுத்தவரை ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருக்ககூடியவருக்கு  மீண்டும் வாய்ப்பு அளித்திருக்கிறார்கள். அதை பற்றி எல்லாம் கவலை இல்லை.

 பத்தாண்டுகளாக அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு செய்துள்ளது. இந்த முறையும் அதிமுக அமோக வெற்றிபெறும். ஏற்கனவே பெரம்பூரில் இஸ்லாமிய மதத்தினருக்கும், கிறித்தவ மதத்தினருக்கும் இடுகாடு என்பது  ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது. அதை புரட்சித்தலைவி அம்மாதான் சரி செய்து, அவர்களுக்கு இடத்தை ஒதுக்கினார். அதேபோல், கொடுங்கையூர் பகுதி குப்பை கிடங்குகளால் மக்கள் பாதிப்படையும் நிலை இருக்கிறது. அதை சீர் செய்யும் வகையில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.

தற்போது வந்திருக்கும் கோரிக்கை என்னவென்றால்  பெரம்பூர் தொகுதியில் பல அடித்தட்டு  மக்களுக்கு பட்டா வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள். நிச்சயம் வருகிற ஆண்டில் அவர்களுடைய கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றி வைப்பேன்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின் போது அதிமுக, பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி தொண்டர்கள் உடனிருந்தனர்.

Related Stories: