பேரறிஞர் அண்ணா படித்த பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளையை அலங்கோலப்படுத்திய அதிமுக: கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதால் சர்ச்சை

* ஆசிரியர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் நியமனம் வரை முறைகேடு

* கட்டிடங்களுக்கு வாடகை உயர்த்தாமல் இருக்க லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்ற நிர்வாகிகள்

சென்னை: பேரறிஞர் அண்ணா படித்த  பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளையை அதிமுக அரசு அலங்கோலப்படுத்தியது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறக்கட்டளையில் நியமிக்கப்பட்ட ஆளும்கட்சி நிர்வாகிகள் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. சென்னையில் இயங்கி வரும் பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் மொத்தம் 6  கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில் பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு  கல்லூரி (ஆண்கள்), செல்லம்மாள் கல்லூரி (பெண்கள்), காஞ்சிபுரத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பச்சையப்பன் கல்லூரிகள், கடலூரில் உள்ள  கந்தசாமி நாயுடு கல்லூரி உட்பட 30க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் அடங்கும். இவை, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், சொத்து மதிப்பு கொண்டவை.

இந்த அறக்கட்டளையின் கீழ் 175 ஆண்டுகளை கடந்து பாரம்பரியமிக்க கல்லூரியாக விளங்கும் பச்சையப்பன் கல்லூரியில் திமுகவை தோற்றுவித்த அறிஞர் அண்ணா, மறைந்த பேராசிரியர் என்.வி.என்.சோமு, முரசொலி மாறன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட  பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்களும், நீதிபதிகளும் படித்தவர்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கல்லூரிகளில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சராக பழனியப்பன் இருந்தபோது, பச்சையப்பன் அறக்கட்டளை தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் 9 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள். இந்த அறக்கட்டளை உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

இவர்கள், அறக்கட்டளைக்கு சொந்தமான 6 கல்லூரிகளில் விதிகளை மீறியும், தகுதி இல்லாத ஆட்களையும் ஊழியர்களாக நியமனம் செய்ததாக கூறப்படுகிறது. இக்கல்லூரிகளில் கடந்த 2014ல் பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை உரிய கல்வி தகுதி இல்லாதவர்கள் என கூறப்படுகிறது. இருப்பினும், தகுதியில்லாத அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு நியமனம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, தொலைதூரக் கல்வி மூலம் பட்டம் பெற்றவர்கள், முனைவர் பட்டம் பெறாதவர்கள் என  பலர் முறைகேடாக உதவிப் பேராசிரியர்கள், விளையாட்டு கல்வி இயக்குநர்கள்,  நூலகர்கள் என பல்வேறு பணிகளில் சேர்ந்திருப்பதாக தெரிகிறது. நெட், ஸ்லெட் போன்ற தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், முனைவர் பட்டம்  பெறாதவர்கள் பலர் குறுக்குவழியில் ஆசிரியர் பதவி பெற்றிருந்தனர்.

கடந்த 2014 முதல் 2016 வரை இந்த விதிமீறல்கள் நடந்திருப்பதாக தெரிகிறது. இதை தொடர்ந்து, கடந்த 2019ல் அறக்கட்டளை தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன்பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் அறக்கட்டளை தலைவராக நியமிக்கப்பட்டார். அவர், இந்த முறைகேடுகள் புகார் தொடர்பாக விசாரணை நடத்தினார். அதில், கல்லூரி ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக தமிழக அரசு, பல்கலைக்கழக  மானிய குழு (யு.ஜி.சி), பல்கலைக்கழகங்கள் வகுத்துள்ள விதிமுறைகள் அப்பட்டமாக  மீறப்பட்டது கண்டறியப்பட்டது. குறிப்பாக, கடந்த 2014 முதல் 2016ம் ஆண்டுகளில்  நியமிக்கப்பட்ட 234 ஆசிரியர்களில் 60 பேர் மட்டுமே தகுதி வாய்ந்தவர்கள்.  மீதமுள்ள 174 பேர் தகுதியற்றவர்கள். சட்டத்துக்கு புறம்பாக  நியமிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் அறக்கட்டளை நிர்வாகம் மட்டுமின்றி உயர் கல்வித்துறை அமைச்சருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில்  பணியாற்றும் ஆசிரியர்கள் 152 பேருக்கு நீதிபதி சண்முகம் அதிரடியாக நோட்டீஸ்  அனுப்பினார். தொடர்ந்து அவர்களிடம் நடந்த விசாரணைக்கு பிறகு, அதில் 105 பேரை பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. ஆனால், இவர்களில் 22 பேர் பணி நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிகிறது. மேலும், சிறந்த கல்வி நிறுவனம் ஆசிரியர்கள் நியமன முறைகேடு புகாரில் மட்டுமின்றி, கல்லூரிகளுக்கான முதல்வர் நியமனத்திலும் குளறுபடிகள் ஏற்பட்டு, அனைத்து விஷயங்களுமே உயர் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டன.

பச்சையப்பன் அறக்கட்டளை நிதி மட்டும் ரூ.1884 கோடி உள்ளது. இந்த அறக்கட்டளையின் வங்கி கணக்கில் உள்ள பல கோடி ரூபாய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டன. இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகள் குறைந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளதால் போதிய வருமானம் வரவில்லை. குறிப்பாக, பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமாக 350 கட்டிடங்கள் உள்ளன. 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கட்டிடங்கள் மூலம் மாதம் ரூ.10 லட்சம்தான் வருமானம் வருகிறது. இந்த கட்டிடங்கள் பாரிமுனை, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம் உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த கட்டிடங்களுக்கு சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்படவில்லை. குறிப்பாக, பல ஆண்டுகளாக குறைந்த தொகையில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

உதாரணமாக, மாதம் ரூ.10 ஆயிரம் வாங்க வேண்டிய இடத்தில் ரூ.1000 மட்டுமே வாடகை வசூலிக்கப்படுகிறது. இதற்காக, அறக்கட்டளை நிர்வாகிகள் லட்சக்கணக்கில் பணம் கையூட்டாக பெற்றுள்ளனர். இதனாலேயே அடந்த கட்டிடங்களுக்கு வாடகை உயர்த்தப்படவில்லை. அறக்கட்டளைக்கு 10ல் ஒரு மடங்குதான் வருவாய் வருவதால், கட்டிடங்கள் வாடகை வகையில் பெரிய அளவில் அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல ஏக்கர் நிலம் முறைகேடாக அறக்கட்டளை நிர்வாகிகளால் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. அதேபோன்று, அறக்கட்டளை நிதியில் இருந்து  ரூ.30 கோடியில் அம்மா அரங்கம், ரூ.3 கோடியில் அண்ணா அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

இந்த அரங்கம் ‘முகூர்த்தம் ஈவன்ட் மேனேஜ்மென்ட்’ என்ற நிறுவனத்திற்கு குறைந்த வாடகைக்கு 20 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த நிறுவனம் கூட அறக்கட்டளை முக்கிய பொறுப்பில் இருந்தவர்களுக்கு சொந்தமானவை என்று கூறப்படுகிறது. இந்த அரங்கம் மூலம் சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்தால், மாதம் ரூ.12 கோடி வரை வருமானம் கிடைத்து இருக்கும். ஆனால், குறைவான வாடகையால் ரூ.1.50 கோடிதான் வருமானம் வருகிறது. இதனால், பச்சையப்பன் அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் குத்தகை ரத்து செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, அந்த அரங்கங்களை குத்தகை எடுத்த நிறுவனம் அறக்கட்டளையிடம் ஒப்படைத்தது. இந்த அறக்கட்டளை கட்டுப்பாட்டில் உள்ள 2 கல்லூரிகளில் விளையாட்டு மைதானங்கள், வாகன நிறுத்தும் இடங்களாக மாற்றப்பட்டன. இதன் மூலம் கோடிக்கணக்கில் அறக்கட்டளை நிர்வாகிகள் பணம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரை ெதாடர்ந்து வாகன நிறுத்தும் இடங்களாக மாற்றப்பட்ட பகுதி மீண்டும் கல்வி பணிக்காக பயன்படுத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது, அறக்கட்டளை நிர்வாக பொறுப்பு உயர் நீதிமன்ற சொத்தாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர், அறக்கட்டளை சொத்துகளில் வருவாயை உயர்த்தாமல் இருந்தது தொடர்பாகவும், அறக்கட்டளைக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டது தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல ஏக்கர் நிலம் முறைகேடாக அறக்கட்டளை நிர்வாகிகளால் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது

Related Stories: