சங்ககிரி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய பாடுபடுவோம்-பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி பேச்சு

சேலம் : சங்ககிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராஜேஷ், அறிமுக கூட்டம் வாசுதேவ் மஹால் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான டி.எம்.செல்வகணபதி தலைமை தாங்கி வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

தமிழகத்தில் பழனிசாமி தலைமையில் இருக்கும் ஆட்சி பாஜகவின் பினாமிஆட்சி. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, 39 தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் எப்படி வெற்றி பெற்றார்களோ? அதே போல சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். தமிழகத்தில் பாஜக கால் ஊன்றினால் 50 ஆண்டு பின்னோக்கி செல்லும். மதவாதம் தலைதூக்கும். தமிழகத்தில் 10ஆண்டுகளாக இருக்கும் இந்த அரசை மாற்ற, மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

இந்த தேர்தல் கலைஞர் மறைவுக்கு பிறகு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடக்கும் தேர்தல். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் யாரும், தற்போது போட்டி களத்தில் இல்லை. 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டவர். எம்எல்ஏவாக, உள்ளாட்சி துறை அமைச்சராக, சென்னை மேயராக, துணை முதல்வராக பணியாற்றியுள்ளார். அவரது தலைமையில் நல்லாட்சி மலர, வேட்பாளர் ராஜேசை வெற்றி பெறவைக்க வேண்டியது நமது கடமை. அனைவரும் தீவிரமாக பணிறாற்றுவோம்’ என்றார்.

கூட்டத்தில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாசி, விவசாய தொழிலாளர் அணி இணை செயலாளர் காவேரி, மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், நிர்மலா, முன்னாள் எம்எல்ஏ வரதராஜன், மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் பேசினர்.

Related Stories: