பெரியகுளம் வடகரையில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்-தண்ணீரில் பூச்சி மருந்து கலந்ததாக குற்றச்சாட்டு

பெரியகுளம் :  பெரியகுளத்தில் உள்ள கக்ரியாகுளத்தில் நேற்று மீன்கள் செத்து மிதந்தன. தொழில் போட்டியில் தண்ணீரில் பூச்சி மருந்தை கலந்ததாக, குத்தகை எடுத்தவர் குற்றம்சாட்டியுள்ளார். பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள கக்ரியாகுளத்தை அன்னபிரகாசம் என்பவர் குத்தகைக்கு எடுத்து, அதில் மீன் வளர்த்து வந்தார். நேற்று மாலை முதல் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கத் தொடங்கின. இதைப் பார்த்த குத்தகைதாரர் குளத்தில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது நீரை முகர்ந்து பார்த்தபோது, அதில் பூச்சி மருந்து தெளித்திருப்பது தெரிய வந்தது.

 குளத்தை குத்தகைக்கு எடுக்க பலர் போட்டியிட்ட நிலையில் தான் இரண்டாவது ஆண்டாக குத்தகை எடுத்ததால், தொழில் போட்டியில் சிலர் செய்துள்ளதாக குத்தகைதாரர் குற்றம் சாட்டுகிறார். மேலும், குளத்து நீரை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் அருந்துவதால், குளத்து நீரில் பூச்சி மருந்தை கலக்கியவர் யார் என கண்டுபிடித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன் வளர்க்கும் குத்தகைதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: