அமைச்சர் வேலுமணி ஆதரவாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ஓட்டுக்கு பணம்: தேர்தல் அதிகாரிகளுக்கு திமுக பரபரப்பு புகார்

சென்னை: அமைச்சர் வேலுமணி ஆதரவாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ஓட்டுக்கு பணம் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி திமுக சார்பில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி இந்திய தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர்கள், பொதுமக்களிடம் போன் எண்களை பெற்றுக்கொண்டு ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணம் விநியோகிப்பதாக அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து அவர் உரிய அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். ஓட்டுக்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும். மேலும் அதிமுக அமைச்சர்கள் போட்டியிடும் சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் அளிப்பது உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இத்தகைய செயல்களை தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: