மஜத எம்எல்ஏவிடம் பாஜ பேரம்: முதல்வர் எடியூரப்பா மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்றம் அதிரடி

பெங்களூரு: மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவை ஆபரேஷன் தாமரை திட்டம் மூலம் பாஜவுக்கு இழுக்க முயற்சித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி முதல்வர் எடியூரப்பா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, அக்கூட்டணியை கவிழ்க்க ஆபரஷேன் தாமரை திட்டம் மூலம் எதிர்க்கட்சி எம்எல்ஏகளை இழுக்க முதல்வர் எடியூரப்பா முயற்சி செய்தாக அப்போது முதல்வராக இருந்த குமாரசாமி குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் குருமிட்கல் தொகுதி மஜத எம்எல்ஏவாக இருக்கும் நாகனகவுடாவை பாஜவுக்கு இழுப்பது தொடர்பாக நாகனகவுடாவின் மகன் சரணகவுடாவிடம் ரெய்ச்சூர் மாவட்டம், தேவதுர்காவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் எடியூரப்பா, பாஜ எம்எல்ஏகள் சிவனகவுடாநாயக், பிரதம்கவுடா ஆகியோர் பேரம் பேசியதாக சிடி வெளியிடப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா, பாஜ எம்எல்ஏகள் சிவனகவுடாநாயக், பிரதம்கவுடா ஆகியோர் மீது சரணகவுடா, தேவதுர்கா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். தன் மீதான புகாரை ரத்து செய்யகோரி முதல்வர் எடியூரப்பா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. முதல்வர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதம் செய்தார். சிடி புகாருக்கும் மனுதாரருக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று வாதிட்டார். சரணகவுடா மற்றும் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதம் செய்ததை தொடர்ந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்தார்.

Related Stories: