தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்!: திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பொதுச்செயலாளர் வைகோ..!!

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மதிமுக-வின் தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலின் முக்கிய அம்சமான ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை உறுதி அளிக்கும் விதமாக தேர்தல் அறிக்கைகளை அரசியல் கட்சியினர் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில்,  சென்னையில் மதிமுக தலைமை அலுவலகத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக-வின் தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். தமிழ்நாடு சனாதனத்திற்கு எதிரான பெரியார் மண் - தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் உரையாடினார்.

அப்போது பேசிய வைகோ, மக்கள் விரோத திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து வருகிறது. காவிரி டெல்டாவை பாலைவனமாக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. காவிரி மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக தமிழகத்தை பாலைவனமாக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டார். மேலும் தமிழக நலன்களுக்கு எதிரான மத்திய பாஜக அரசுக்கு கள்ளத்தனமாக அதிமுக அரசு துணைபோகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படுவதை மதிமுக எதிர்க்கும் என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: