போலி ‘ரைஸ் புல்லிங்’ கொடுத்து தொழிலதிபரிடம் 26 கோடி மோசடி பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகன் இசையமைப்பாளரான அம்ரிஷ் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வளசரவாக்கம் ஜானகி நகரை சேர்ந்த தொழிலதிபர் நெடுமாறன் புகார் ஒன்று அளித்தார். அதில், பிரபல திரைப்பட நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரிஷ் (32), நடிகராகவும், இசையமைப்பாளராகவும் உள்ளார். இவர், கடந்த 2013ம் ஆண்டு எனக்கு அறிமுகமானார். எனது தொழில் வளர்ச்சி அடையும் எனக் கூறி ‘ரைஸ் புல்லிங்’ என்ற இரிடியம் கலந்த கோயில் கலசம் இருப்பதாக கூறினார். அதை அலுவலகத்தில் வைத்து பூஜை செய்தால் தொழில் வளர்ச்சி அடையும் என்றார். அதற்கு விலையாக 30 கோடி கேட்டார். பின்னர் படிப்படியாக குறைத்து உங்களுக்காக 26 கோடிக்கு இரிடியம் கலந்த ‘ரைஸ் புல்லிங்’ தருவதாக கூறினார். அதன்படி நான் அம்ரிஷிடம் ₹26 கோடி பணம் கொடுத்தேன். அவரும் எனக்கு இரிடியம் கலந்த ரைஸ்புல்லிங் கொடுத்தார். சில நாட்கள் கழித்து அதை சோதனை செய்த போது அது போலி என ெதரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த நான் அம்ரிஷிடம் கூறினேன். அதற்கு அவர் முறையாக பதில் தரவில்லை. உடனே நான் கொடுத்த 26 கோடி பணத்தை திரும்ப கேட்ட போது அவர் பணத்தை திரும்ப கொடுக்க முடியாது  என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் இரிடியம் இருப்பதாக கூறி 26 கோடி மோசடி செய்த இசையமைப்பாளர் அம்ரிஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுபடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் இசையமைப்பாளர் அம்ரிஷிடம் விசாரணை நடத்தினர். அதில் தொழிலதிபர் நெடுமாறனுக்கு இரிடியம் இருப்பதாக கூறி போலியான கோயில் கலசத்தை கொடுத்து 26 கோடி பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து இசையமைப்பாளர் மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அம்ரிஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories: