ஆண்டிபட்டி தொகுதியின் வெற்றியை நிர்ணயிக்கும் கூடலூர் நகராட்சி

கூடலூர்: ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் களமாக உள்ளது கூடலூர் நகராட்சி ஓட்டுகள். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு வென்றதால் விஐபி அந்தஸ்தை பெற்றிருந்த ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில், கடந்த 2019ல் நடந்த இடைத்தேர்தலில் அண்ணன்-தம்பி மோதினர். இதில் திமுக வேட்பாளரான மகாராஜன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலிலும் அதே அண்ணன் தம்பிகள் மோதுகின்றனர். திமுக சார்பில் மகாராஜனும், அதிமுக சார்பில் தம்பியான லோகிராஜனும் போட்டியிடுகின்றனர். இதனால் மீண்டும் மக்களின் அதிக எதிர்பார்ப்புள்ள தொகுதியாக உள்ளது ஆண்டிபட்டி தொகுதி.

சீரமைக்கப்பட்ட ஆண்டிபட்டி தொகுதியில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 257 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 39 ஆயிரத்து 640 பெண் வாக்காளர்கள், 34 இதரர் என 2 லட்சத்து 75 ஆயிரத்து 931 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒரே நகராட்சி கூடலூர். 21 வார்டுகளை கொண்ட கூடலூர் நகராட்சியில், 2021 வாக்காளர் பட்டியல் விபரப்படி 18 ஆயிரத்து 199 ஆண்கள் மற்றும் 19 ஆயிரத்து 339 பெண்கள், 3 இதரர் என 37 ஆயிரத்து 541 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 2019 இடைத்தேர்தலில் கூடலூர் நகராட்சியில் மட்டும் திமுக, அதிமுகவைவிட 4600 ஓட்டுகள் அதிகம் பெற்றது. கூடலூர் நகராட்சி ஓட்டுக்களும், இதைச்சுற்றியுள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி ஓட்டுக்களும் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மைய்யம், நாம்தமிழர் கட்சியினர் கூடலூரில் முக்கிய விஐபி சந்திப்பை நடத்தி வருகின்றனர்.  

ஆண்டிபட்டி தொகுதியில் வென்ற வேட்பாளர்கள் விவரம்:

1962ல் கிருஷ்ணவேணி (இந்திய தேசிய காங்கிரஸ்), 1967ல் பரமசிவம் (சுதந்திரா கட்சி), 1971ல் குருசாமி (சுதந்திரா கட்சி), 1977ல் கந்தசாமி (அதிமுக), 1980ல் எஸ்.எஸ்.ராஜேந்திரன் (அதிமுக), 1984ல் எம்ஜிஆர் (அதிமுக), 1989ல் ஆசையன் (திமுக), 1991ல் தவசி (அதிமுக), 1996ல் ஆசையன் (திமுக), 2001ல் தங்க தமிழ்செல்வன் (அதிமுக), 2002ல் ஜெயலலிதா (அதிமுக), 2006ல் ஜெயலலிதா (அதிமுக), 2011 மற்றும் 2016ல் தங்கத்தமிழ்செல்வன் (அதிமுக), 20019 இடைத்தேர்தலில் மகாராஜன் (திமுக) வென்றுள்ளனர்.

Related Stories: