கோவை அருகே ரயில் மோதி யானை படுகாயம்

கோவை: கோவை அருகே ரயில் மோதி காட்டு யானை காயம் அடைந்தது. அதற்கு வனத்துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கோவை மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பிரிவு, சோளக்கரை பீட்டுக்கு உட்பட்ட ரயில்வே தண்டவாளம் அருகில் திருவனந்தபுரம்- சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்டு யானை அடிப்பட்டு மோதியதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது, ரயில்வே தண்டவாளத்தில் இருந்து 5 மீட்டர் தொலைவில் 28 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, தலை மற்றும் பின் பகுதியில் காயம்பட்ட நிலையில் படுத்து கிடந்தது.

கேரள- தமிழக எல்லையில் உள்ள வாளையார் ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு அங்கிருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்த போது கேரளாவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 02696) மோதி, யானை படுகாயம் அடைந்திருப்பது தெரியவந்தது. மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில், உதவி வன பாதுகாவலர் மற்றும் கால்நடை மருத்துவர்கள், மருந்துகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories: