வேலூரில் திரண்ட வெளியூர் திருநங்கைகள்- திருநங்கைகள் கொண்டாடிய மயானக் கொள்ளை விழா

வேலூர் : வேலூரில் திருநங்கைகள் கொண்டாடிய மயானக் கொள்ளை திருவிழாவில் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த திருநங்கைகளுடன், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியை தொடர்ந்து வரும் அமாவாசையில் மயானக் கொள்ளை திருவிழா நடத்தப்படுகிறது. இதையடுத்து மறுநாளில் வேலூர் சலவன்பேட்டையில் திருநங்கைகள் சார்பில் மயானக் கொள்ளை விழா நடத்தப்படுகிறது. இவ்விழா திருநங்கைகளுக்காகவே நடைபெறும் விழுப்புரம் கூவாகம் விழாவை போன்று திருநங்கைகளால் மட்டுமே நடத்தப்படும் விழாவாகும்.

இவ்விழாவில் பெங்களூரு, சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான திருநங்கைகள் வந்து கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு மயானக் கொள்ளை விழா நேற்று காலை சலவன்பேட்டை எம்ஜிஆர் நகர் மலையடிவாரம் கோட்டை காளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன், காளியம்மன் சுவாமி ரதங்கள் முன்னே அம்மனின் பூங்கரகங்கள் செல்ல, முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்தது. தொடர்ந்து எம்ஜிஆர் நகர் மயானத்தில் அமைக்கப்பட்டிருந்த அங்காளம்மன் சிலையின் முன்பு ரதங்கள் நிலை நிறுத்தப்பட்டன.

அங்கு சிறப்பு பூஜைகளை விழாக்குழு தலைவர் திருநங்கை கங்கா நடத்தினார். பின்னர் மயான சூறையாடல் நடந்தது. அப்போது சலவன்பேட்டை, ஓல்டு டவுன், எம்ஜிஆர் நகர், சார்பனாமேடு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் திருமணம், குழந்தை வரம் வேண்டி சூறையாடலின் போது பூசாரி கங்காவிடம் எலுமிச்சை, பொரி உருண்டைகளை பிரசாதமாக பெற்றுக் கொண்டதுடன், பூசாரி கங்காவிடம் ஆசி பெற்று சென்றனர். இவ்விழாவில் பெங்களூரு, சென்னை மற்றும் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்த திருநங்கைகளுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: