அப்பர்பவானி வனப்பகுதியில் பயங்கர காட்டு தீ-அதிரடிப்படை முகாம், மின்வாரிய குடியிருப்புகள் தப்பின

மஞ்சூர் : மஞ்சூர் அருகே உள்ளது அப்பர்பவானி அணை. இதன் அருகே மின்வாரிய குடியிருப்புகள் உள்ளன. மேலும், அப்பர்பவானி பகுதியானது தமிழக-கேரளா எல்லையை ஒட்டி உள்ளதால் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அவர்களது ஊடுருவலை தடுக்கும் நடவடிக்கையாக இப்பகுதியில் அதிரடி படையினரின் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பர்பவானியை சுற்றிலும் இருமாநிலத்திற்கு சொந்தமான அடர்ந்த காடுகள் பரந்து விரிந்துள்ளன. இங்கு விலை உயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள், நெல்லிக்காய், கடுக்காய் கொண்ட மருத்துவ குணம் கொண்ட மரங்கள் வளர்ந்துள்ளன. மேலும் புலி, சிறுத்தை, யானைகள், மான்கள், கரடிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் உறைவிடமாகவும் அப்பர்பவானி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில், போதிய மழையின்மையாலும் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் பனியின் தாக்கத்தாலும் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் திடீரென காட்டு தீ ஏற்பட்டது. வறட்சியால் காய்ந்து கிடந்த செடி, கொடிகள், புல்வெளிகளில் பரவியதால் தீவிரம் அடைந்த காட்டு தீ மள,மளவென பல இடங்களிலும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

இதைத்தொடர்ந்து, குந்தா ரேஞ்சர் சரவணன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் விரைந்து சென்று காட்டு தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், அதிரடி படையினர் தங்கியுள்ள முகாம் அருகே தீ பரவியதை தொடர்ந்து அதிரடி படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு முகாமை சுற்றிலும் இருந்த செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து வனத்துறையினருடன் இணைந்து காட்டு தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் மூலம் தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மாலை மின்வாரிய குடியிருப்பு அருகே காட்டு தீ பரவியது. அப்பர்பவானி அணையில் நடைபெறும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அங்கு தங்கி உள்ளதுடன் பல கோடி ரூபாய் மதிப்பிலான மின் தளவாடப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து மின்வாரிய தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் குடியிருப்பை சுற்றிலும் பரவிய காட்டு தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். இதன்மூலம், மின்வாரிய குடியிருப்பு மற்றும் அதிரடி படை முகாம் ஆகியவை தப்பியது.

தொடர்ந்து நேற்று காலையும் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர். இப்பகுதியில் பரவிய காட்டு தீயில் பல ஏக்கர் பரப்பிலான வனப்பகுதிகள் எரிந்து சாம்பலாகியிருக்ககூடும் என கருதப்படுகிறது.

இது குறித்து வனத்துறையினர் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

Related Stories: