அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் நாங்குநேரி அருகே கிராமத்தினர் தேர்தல் புறக்கணிப்பு

நாங்குநேரி: நாங்குநேரி அருகே அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததை கண்டித்து கிராமத்தினர் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

நாங்குநேரி அடுத்த தெற்கு நாங்குநேரி ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சங்குளம், பெரும்பத்து, இளையநேரி, கிருஷ்ணன்புதூர், தட்டான்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கடந்த சில மாதங்களாக அடிப்படை வசதிகளின்றி பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கழிவு நீரோடை பராமரிக்காததால் நிறைந்து தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அனைத்து தெருக்களிலும் துர்நாற்றம் வீசுகிறது.

போதிய குடிநீர் வசதி இல்லாததால் மஞ்சங்குளம் கிராமத்தினர் 4கிமீ தொலைவில் உள்ள நாங்குநேரி குடிநீர் நீரேற்று நிலையத்தில் பைக்குகளில் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். இங்கு மினி குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு பராமரிப்பின்றி உடைந்து கிடக்கிறது. 3ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாக இருக்கிறது.

பல லட்சம் ரூபாய் வீணாகியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி முத்துராமலிங்கம்(50) பொதுமக்கள் சார்பில் கலெக்டர், அனைத்து அலுவலர்களுக்கும் அளித்துள்ள மனுவில், தெற்கு நாங்குநேரி  ஊராட்சி மஞ்சங்குளத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு குடிநீர் வசதி இல்ைல. இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை.

நாங்குநேரி-ஏர்வாடி சாலையில் மஞ்சங்குளத்திற்கு பஸ்நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார், அரசு பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் 2 கிமீ நடந்து சென்று நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே பஸ் ஏற வேண்டியுள்ளது.

எனவே மஞ்சன்குளம், வீரான்குளம் பஸ் நிறுத்தங்களில் அனைத்து பஸ்களும் நிற்க வேண்டும். இவ்வூரில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும். மஞ்சங்குளம், பெரும்பத்து, வீரான்குளம், கிருஷ்ணன்புதூர், இளையநேரி உள்ளிட்ட கிராமங்களில அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார். மனு அளித்து பல மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து வரும் சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

டி.ராமநாதபுரத்திலும் தேர்தல் புறக்கணிப்பு

சிவகிரி : சிவகிரி அருகேயுள்ள டி.ராமநாதபுரம் கிராமத்திற்கு ராஜபாளையத்தில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எவ்வித அறிவிப்புமின்றி பஸ் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள், ராஜபாளையம் அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை இயக்ககோரி விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவும், அதற்கும் செவிசாய்க்கவில்லை என்றால் இப்பகுதி பொதுமக்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைப்பதுடன், வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அனைத்து வர்த்தகர்கள் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

Related Stories: