ஆந்திர உள்ளாட்சி தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி: 18ம் தேதி மேயர் தேர்வு நடக்கிறது

திருப்பதி: திருப்பதி, சித்தூர் மாநகராட்சி தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். திருப்பதி மாநகராட்சியில் 50 வார்டுகளுக்கு கடந்தாண்டு மார்ச் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் சார்பில் வேட்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஒரு சில வார்டுகளில் போட்டியின்றி சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது, கொரோனா பரவல் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த மாத இறுதியில் 2ம் கட்டமாக நடந்த தேர்தலில் 22 வார்டுகளில் போட்டியின்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற்றனர். ஒரு வார்டில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீதமுள்ள 27 வார்டுகளுக்கு கடந்த 10ம் தேதி 3ம் கட்டமாக தேர்தல் நடந்தது.

இந்நிலையில், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், 26 வார்டுகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரும், ஓரிடத்தில் தெலுங்கு தேசம் கட்சியும் வெற்றி பெற்றது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான கிரிஷா கூறுகையில், ‘‘மாநகராட்சி தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் 48 இடத்திலும், தெலுங்கு தேசம் கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றது. ஓரிடத்தில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேயர் மற்றும் துணை மேயர் தேர்வு வருகிற 18ம் தேதி நடைபெறும். தேர்தல் அமைதியாக நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

அதேபோல், சித்தூர் மாநகராட்சியில் உள்ள 13 வார்டுகளில் கடந்த 10ம் தேதி தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு பெட்டிகள் சித்தூர் பி.வி.கே.என் அரசு கல்லூரியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று வாக்குப்பதிவு எண்ணப்பட்டது. இதில், மொத்தம் உள்ள 13 வார்டுகளில் ஆளும் கட்சியினர் 9 வார்டுகளிலும், தெலுங்கு தேசம் கட்சியினர் 3 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். வருகிற 18ம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெற உள்ளது.

Related Stories: