மது குடிக்கும் இடம் தொடர்பான தகராறில் ஹாலோபிளாக் கல்லை போட்டு வடமாநில தொழிலாளி கொலை: செக்யூரிட்டி போலீசில் சரண்; கொடுங்கையூரில் நள்ளிரவு பயங்கரம்

சென்னை: மது குடிக்கும் இடம் தொடர்பான தகராறில் வடமாநில தொழிலாளியை அடித்து கொலை செய்த செக்யூரிட்டி போலீசில் சரணடைந்த சம்பவம் கொடுங்கையூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொடுங்கையூர் வாசுகி நகர் 5வது தெருவில் கவிதா என்பவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரசன்னகுமார் ஜனா(31) கட்டிட வேலை செய்தார். மேலும், அதே மாநிலத்தை சேர்ந்த துக்குனா சாகு அதே கட்டிடத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரசன்னகுமார் ஜனா தனது 3 நண்பர்களை வரவழைத்து அந்த கட்டிடத்தில் மது அருந்தி உள்ளார்.

அப்போது மற்றொரு அங்கு வந்த செக்யூரிட்டி துக்குனா சாகு, “நான் இந்த கட்டிடத்தின் செக்யூரிட்டி. இங்கு மது அருந்த அனுமதிக்க முடியாது” என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரசன்னகுமார் ஜனா, துக்குனா சாகுவை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர். இதற்கிடையில், மதுபோதையில் இருந்த பிரசன்னகுமார் ஜனா இரவு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவு 1 மணியளவில் அங்கு வந்த செக்யூரிட்டி துக்குனா சாகு, கட்டுமானத்துக்கு வைத்திருந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து பிரசன்னகுமார் தலையில் சரமாரியாக  அடித்து கொலை செய்தார்.

பின்னர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி போலீசில் சரணடைந்தார். இதனையடுத்து, கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரசன்னகுமார் ஜனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செக்யூரிட்டி துக்குனா சாகுவை கைது செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: