சீனா தரும் தொல்லை; குவாட்டில் எச்சரிக்கை: வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன்: பல்வேறு விஷயங்களில் சீனாவின் சவால்களை எதிர்கொள்வது பற்றி  குவாட் தலைவர்கள் விவாதித்ததாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.  அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து, ‘குவாட்’  என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இதன் உச்சி மாநாடு நேற்று முன்தினம்  காணொலி மூலமாக நடந்தது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய  பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான்  பிரதமர் யோஷிதே சுகா கலந்து கொண்டனர். இதில், சர்வதேச அளவில் சீனாவால்  ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டதாக  அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் நேற்று கூறினார்.  இது

பற்றி வெள்ளை மாளிகையில் நேற்று அவர் அளித்த பேட்டி வருமாறு:

* பிராந்திய ரீதியிலான பிரச்னைகள், தெற்கு மற்றும் கிழக்கு சீனக்கடலில்  சுதந்திரமான கடற்பயணம், வடகொரியாவின் அணு ஆயுத உற்பத்தி, மியான்மரில்  நடந்து வரும் ராணுவ ஆட்சி பற்றி குவாட் தலைவர்கள் விவாதித்தனர்.

* சர்வதேச நாடுகளுடன் சீனா செய்து வரும் மோதல் போக்கு, அதனால் ஏற்படும்  சவால்கள் பற்றியும் பேசப்பட்டது. அதே நேரத்தில் சீனா குறித்து தவறான பிம்பமும்  எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தினர்.

* தெற்காசிய நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக இந்தியாவுடன் தலைவர்கள்  ஒப்பந்தம் செய்துள்ளனர். 100 கோடி தடுப்பூசிகளை இந்தியா தயாரித்து  வழங்குவதற்கான ஒத்துழைப்பை குவாட் நாடுகள் பகிர்ந்துகொள்ளும்.

* இந்த உச்சி மாநாடு மூலம் சீன அரசுக்கான தெளிவான ஒரு செய்தியை  அமெரிக்காவின் முயற்சிகள் சொல்லி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: