நாகமங்கலம் ஊராட்சி மாதாகோயில் பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரத்தை சீரமைக்க கோரி மக்கள் மறியல்-1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

அரியலூர் : குறைந்த அழுத்த மின்சாரத்தை சீரமைக்க கோரி நாகமங்கலம் ஊராட்சி மாதா கோயில் பஸ் ஸ்டாப் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் ஊராட்சி மாதாகோயில் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாத காலமாக குறைந்த அழுத்த மின்சாரத்தால் மின் மோட்டார், டிவி, பிரிஜ், பேன், மிக்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எதுவும் சரிவர செயல்படவில்லை.

இதனால் மின் சாதன பொருட்கள் பழுதடைவதோடு, குடிநீர் கிடைக்காமலும் அவதி பட்டு வந்துள்ளனர். இது குறித்து ஊராட்சித் தலைவரிடம் புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தியடைந்த மாதா கோயில் கிராம பொதுமக்கள் விக்கிரமங்கலம்-அரியலூர் சாலையில் மாதா கோயில் பஸ் நிறுத்தத்தில் மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் எஸ்ஐ சரத்குமார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் மின்வாரிய அதிகாரிகளிடம் கூறி சீரான மின்சாரம் கிடைப்பதோடு, குடிநீர் பிரச்னைகள் விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்-விக்கிரமங்கலம் சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: