23ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு பிளஸ் 2 செய்முறை தேர்வு ஏப்.16 முதல் தொடங்குகிறது

சென்னை:  கொரோனா தொற்றுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் முதல் பிளஸ் 2 வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்து தேர்வு அட்டவணையும் வெளியிட்டுவிட்டது. முன் பருவத் தேர்வுகள் தற்போது நடத்தப்படுகிறது. செய்முறைத் தேர்வுகளை  ஏப்ரல் 16 முதல் 23ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. செய்முறை தேர்வுகளை நடத்துவதற்காக முதன்மைக் கண்காணிப்பாளர்கள், புறத் தேர்வர்களை வேறு பள்ளிகளின் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள வேண்டும், உதவியாளர்கள், எழுத்தர், அலுவலக உதவியாளர்கள், துப்புரவாளர்கள் ஆகியோரை நியமித்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரியல் பாடத்தை பொறுத்தவரையில் மதிப்பெண் பட்டியலில் இரண்டு பிரிவுகளாக பிரித்து உயிரி தாவரவியல், மற்றும் உயிரி விலங்கியல் என்று பிரித்து மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். இயற்பியல் பாட செய்முறைத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் சயின்டிபிக் கால்குலேட்டர்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல்களை முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழியாக தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களின் செய்முறைத் தேர்வு மதிப்பெண்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்று அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: