நீட் மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றலாமா?: பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூர் - உன்னியாலைச் சேர்ந்த ரஷீத் (45) ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,‘‘நீட் தேர்வு முறைகேடு வழக்கில் எனக்கும் தொடர்புள்ளதாகக் கூறி சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். எனக்கு எந்த தொடர்பும் இல்லை. தவறாக எனது பெயரை வழக்கில் ேசர்த்துள்ளனர். எனக்கு ஜாமீன் கோரிய மனு தேனி நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. எனவே, இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி, ‘‘நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கைரேகைகளை பதிவு செய்து, சரி பார்த்த பிறகு தேர்வு எழுத அனுமதிப்பது குறித்து அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். இந்த முறைகேடு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக வேறு மாநிலத்தில் ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா? ஏன் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது என்று சிபிஐ மற்றும் சிபிசிஐடி தரப்பில் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Related Stories: