செங்கல்பட்டு வேட்பாளரை மாற்ற கோரி சிங்கபெருமாள் கோவிலில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை மாற்ற கோரி சிங்கபெருமாள் கோவிலில் அதிமுக நிர்வாகிகள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரசாரம் என தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதில் முக்கியமாக அதிமுக கூட்டணியில் வேட்பாளர் அறிவிப்புக்கு எதிர்ப்பு மற்றும் கூட்டணி கட்சிக்கு தொகுதி ஒதுக்கியதில் அதிருப்தி போன்ற காரணங்களால் பல இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் நடந்து வருகிறது. செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக வேட்பாளராக கஜா (எ) கஜேந்திரன் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக நிர்வாகிகள் சிங்க பெருமாள் கோவிலில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்று, சிங்கபெருமாள்கோவில் எம்ஜிஆர் சிலை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக நிர்வாகி அன்சாரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கஜேந்திரன், நேற்று முதல் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதனால் செங்கல்பட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Related Stories: