ஜெயலலிதா சீட் வழங்கியவருக்கு வாய்ப்பு மறுப்பு அமைச்சர் வளர்மதி ஸ்ரீரங்கத்தில் சுயேச்சையாக களமிறங்க முடிவு?

ஜெயலலிதாவால் இரு முறை சீட் வழங்கப்பட்ட வளர்மதிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் வளர்மதி சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 9 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடுகிறது. நேற்றுமுன்தினம் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான வளர்மதிக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. இதனால் வளர்மதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டபோது, அவரது எம்எல்ஏ பதவி பறிபோனது. இதனால் ஸ்ரீரங்கத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா, வளர்மதிக்கு வாய்ப்பு வழங்கினார். அவரும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர் 2016 தேர்தலிலும் வளர்மதிக்கு வாய்ப்பு வழங்கிய ஜெயலலிதா, அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுத்தார். தற்போது, சீட் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருக்கும் வளர்மதி, ஸ்ரீரங்கத்தில் சுயேட்சையாக கூட களமிறங்கலாம் என்று அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. மீண்டும் சீட் வழங்கப்படாதது பற்றி அமைச்சர் வளர்மதியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்று கூறினார். வளர்மதிக்கு பதிலாக ஸ்ரீரங்கம் தொகுதி, முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவர், 1991ல் இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்று வேளாண்துறை அமைச்சராக இருந்தார். 1996ல் அதிமுக அடைந்த தோல்விக்கு பிறகு, அதிமுகவில் இருந்து வெளியேறி, தனிக்கட்சி துவங்கி நடத்தி வந்தார். பின்னர் கட்சியை கலைத்து விட்டு மீண்டும் அதிமுகவில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், திருச்சி மாவட்ட ஆவின் தலைவராக இருப்பவர் கார்த்திகேயன். இவர், கிழக்கு தொகுதிக்கு சீட் கேட்டு விருப்ப மனு அளித்திருந்தார். தலைமை கழக நிர்வாகிகளுடன் மிக நெருக்கமாக இருந்தவர். ஆனால், சீட் வழங்கப்படாததால் கார்த்திகேயனும் அதிருப்தியில் இருக்கிறாராம்.

Related Stories: