முதல்வர் பதவி, கூடுதல் தொகுதி கேட்டு அடம் அமமுக - தேமுதிக கூட்டணியில் இழுபறி: தனித்து போட்டியிட விஜயகாந்த் திட்டம்?

சென்னை: தேமுதிக சார்பில் முதல்வர் பதவி மற்றும் கூடுதல் தொகுதி கேட்டு முரண்டு பிடித்ததால், அமமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் சூழ்நிலையில், தேமுதிக தனித்து போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. ஆனால், அதிமுகவில் கூட்டணி தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி நீடித்து வந்தது. தற்போது வேட்பாளர் அறிவிப்பிலும் கட்சி தொண்டர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், அதிமுகவுடன் கடந்த 10 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த முக்குலத்தோர் புலிப்படை மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணியில் இருந்து விலகியது.

இதேபோல், தேமுதிகவிற்கு மிகக்குறைந்த அளவிலான தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக அதிமுக தெரிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த தேமுதிகவும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது. இந்தநிலையில், டிடிவி.தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து நேற்று முன்தினம் நள்ளிரவு அமமுக நிர்வாகிகளுடன் தேமுதிகவினர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமமுக துணை பொதுச் செயலாளர் பழனியப்பன், தென்மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்கராஜாவுடன் தேமுதிக துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, அவைத்தலைவர் இளங்கோவன் ஆகியோர் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது 50 தொகுதியை அமமுக ஒதுக்கும் எனவும், ஓரிரு நாளில் தலைமையுடன் பேசி நல்ல முடிவை தெரிவியுங்கள் என அமமுக தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், டிடிவி.தினகரனுடன், எல்.கே.சுதீசும் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மீண்டும் அமமுக-தேமுதிக இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்க வேண்டும். நாங்கள் கேட்கும் தொகுதிகளை தர வேண்டும் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு, அமமுக தரப்பு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. இதனால், கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, நேற்று அமமுக சார்பில் 50 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை டிடிவி.தினகரன் வெளியிட்டார். இது தேமுதிகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அமமுக-தேமுதிக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தேமுதிக தனித்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: