காற்று போன பலூன் ஆனார் குஷ்பு: பாஜ தலைமை மீது கடும் அதிருப்தி

தான் எதிர்பார்த்து காத்திருந்த தொகுதி பாஜ வேட்பாளர் பட்டியலில் இல்லாததால் எதிர்பார்ப்புடன் இருந்த குஷ்பு ஏமாற்றமடைந்தார். இதனால் அவர் பாஜ தலைமை  மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜ பக்கம் தாவிய குஷ்பு சில நிபந்தனைகளுடன் தான் இணைந்ததாக பேச்சு அடிபட்டது. முக்கிய பொறுப்பு அல்லது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்பது தான் அந்த நிபந்தனையாம். அதற்கான உத்தரவாதம் கிடைத்த பின்பே பாஜவில் இணைந்தார் என்ற தகவல்கள் வந்தன. அவரது கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக பாஜ தலைமையும் உறுதி அளித்திருந்தது. இதை எதிர்பார்த்து, சேப்பாக்கம்- திருவல்லிக்கேனி தொகுதியை குறிவைத்து களம் இறங்கினார். கடந்த 10 நாட்களாக இந்த தொகுதியில் தெரு தெருவாக பிரசாரத்திலும் ஈடுபட்டார். தொகுதியே ஒதுக்காத நிலையில் குஷ்புவின் அலப்பறையை கண்டு பாஜவினரே அதிர்ச்சி அடைந்தனராம். கண்டெய்னரில் தேர்தல் அலுவலகம் என்றும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகள் என்றும் பல லட்சங்களை வாரி இறைத்து வந்தாராம்.

 பாஜவில் குஷ்புக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் வரப்போகும் தேர்தலில் குஷ்புக்கு சீட் தரப்படும் என்றும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேனி தொகுதி ஒதுக்க வாய்ப்புள்ளது என்ற தகவலும் வெளியானது. இந்த உற்சாகத்தில் தான் குஷ்பு தேர்தல் களத்தில் குதித்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் பாஜவுக்கான தொகுதிகளை நேற்று அதிமுக வெளியிட்டது. அதில் குஷ்பு ஆவலோடு காத்திருந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியே இல்லை. அதை பாமகவுக்கு ஒதுக்கி விட்டனர். பாஜ தலைவர் எல்.முருகன் அவருக்காக முட்டி மோதியும் இந்த தொகுதியை கேட்டு பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது.  இதற்கு மாற்றாக மயிலாப்பூர் தொகுதியை கேட்டுள்ளனர். அதையும் அதிமுக தர முடியாது என்று கூறிவிட்டதாக தெரகிறது. இதனால் குஷ்பு மிகவும் ஏமாந்து போயிருப்பதாக கூறப்படுகிறது. சீட் கிடைத்து விட்டதாகவே நினைத்து தொகுதி முழுவதும் சுற்றி வந்த அவருக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. இதனால் பாஜ தலைமை மீது குஷ்பு கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்.

Related Stories: