பாணாவரம் அருகே மாட்டு தொழுவமாக மாறிய பள்ளி வளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை

பாணாவரம்: பாணாவரம் அடுத்த காட்டுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 140க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கோயில் உள்ளது. அங்குள்ள மரத்தடியில் சிலர் மாடுகளை கட்டி பராமரித்ததால் பள்ளி வளாகம் மாட்டுத்தொழுவமாக மாற்றியது. இதனால், கல்வி கற்க வரும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ராணிப்பேட்டை கூடுதல் கலெக்டர் உமா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, நேற்று நெமிலி பிடிஓ அன்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் தொடக்கப்பள்ளி வளாகத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், அங்குள்ள மாடுகளை அப்புறப்படுத்தி உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், தூய்மை பணியாளர்களை கொண்டு பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. நீண்டகால பிரச்னைக்கு தீர்வு கண்ட தினகரன் நாளிதழுக்கு அப்பகுதிமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: