அரசு குடும்பம் மீது மேகன் இனப்பாகுபாடு புகார் அளிப்பது பெரும் கவலை அளிக்கிறது!: இங்கிலாந்து அரசி எலிசபெத் அறிக்கை..!!

லண்டன்: இங்கிலாந்தின் முன்னாள் இளவரசன் ஹாரியும், அவரது மனைவி மேகனும் தங்கள் குடும்பத்தின் மீது இனப்பாகுபாடு குற்றச்சாட்டு கூறியிருப்பது கவலை அளிப்பதாக ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார். அரச பட்டத்தை துறந்து, இங்கிலாந்தில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் வசித்து வரும் இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும், சமீபத்தில் ஓப்ரா விண்ட்ரோவுக்கு அளித்த தொலைக்காட்சி பேட்டி உலகம் முழுவதும் விவாத பொருளாகியிருக்கிறது.

இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியினர் அரச குடும்பத்தில் இருந்து பிரிந்ததற்கு இனப்பாகுபாடு தான் காரணம் என்று பேட்டியில் மேகன் குற்றம்சாட்டியிருந்தார். ஹாரிக்கும், மேகனுக்கும் பிறக்கும் குழந்தை கருப்பாக இருக்குமோ என்று அரச குடும்பத்தினர் கவலைப்பட்டதாக தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் மேகன். இந்த குற்றச்சாட்டு பிரிட்டனிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மேகனின் குற்றச்சாட்டு தங்களுக்கு கவலை அளிப்பதாக இங்கிலாந்து அரச குடும்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பக்கிம்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், இளவரசர் ஹாரி, மேகன் மற்றும் குழந்தை ஆகியோர் எப்போதுமே அரச குடும்பத்தால் மதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகனின் குற்றச்சாட்டு தீவிரமாக பார்க்கப்பட்டு அந்த புகார்கள் அரச குடும்பத்தால் தனிப்பட்ட முறையில் தீர்க்கப்படும் என்று ராணி எலிசபத் தரப்பில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: