கன்னியாகுமரி காங்கிரசின் கோட்டை: தமிழக காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் விஜய் வசந்த்

குமரி தொகுதியில் ராகுல்காந்தி பிரசாரம் எந்த அளவுக்கு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது? அவை வாக்குகளாக மாறுமா?

இரண்டாவது முறையாக தென் தமிழகத்துக்கு ராகுல்காந்தி வந்தது, அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்காரர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள், இளைஞர்கள், தாய்மார்கள் மத்தியிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். ஒரு தலைவராக இல்லாமல் தொண்டனாகவும், நண்பனாகவும் எல்லாரிடமும் பழகினார். பள்ளி, கல்லூரி  மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தியது உள்ளிட்ட அவரது செயல்பாடுகளின் போது, அவர்களில் ஒருவராக தான் பழகினார். இவை அனைத்தும் காங்கிரசுக்கான நம்பிக்கை வாக்குகளாக மாற வாய்ப்புள்ளது.

தமிழக அரசியலில் வசந்தகுமார் ஒரு பரபரப்பு அரசியல்வாதியாக திகழ்ந்தவர். அவரது மகனாக சினிமா துறையில் இருந்து வந்திருக்கும் உங்களது அரசியல் வேகம் எப்படி இருக்கும்?   

அப்பாவை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். ஏனென்றால், அப்பாவின் அனுபவம் தான் எனது வயது என்று சொல்லலாம். அந்த அனுபவத்திலும் சரி, இப்போது அப்பா இல்லாத நிலையில் அந்த இடத்தை நிரப்ப வேண்டிய பொறுப்பும் அதிகமாக உள்ளது. 5 ஆண்டுகள் எம்பியாக இருக்க வேண்டிய நிலையில், ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருந்துள்ளார். அதிலும் மக்களுக்கு எவ்வளவு செய்ய வேண்டுமோ அவ்வளவு செய்திருக்கிறார். அவரது கனவுகளை நிறைவேற்ற வேண்டிய கடமை இருப்பதால் 3 மடங்கு வேகமாக செயல்பட வேண்டியுள்ளது. அப்பாவுக்கு மகனாகவும், காங்கிரஸ் தொண்டனாகவும் எனது கடமைகளை நிறைவேற்றுவேன்.

குமரி மக்களவை தொகுதி உங்களுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே? தொகுதியில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

காங்கிரசில் பலர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அவர்களில் தகுதியுள்ள ஒருவரை காங்கிரஸ் தலைமை தான் தேர்வு செய்யும். கன்னியாகுமரி காங்கிரசின் கோட்டை என்று சொல்லலாம். அதுவும் இந்த கூட்டணியும் ஒரு பலம். பாஜ மீது அதிருப்தி அதிகமாக உள்ளது. பாஜவுடன், அதிமுக இணைந்ததால் ஏற்பட்ட அதிருப்தி உள்ளிட்டவைகளால் இந்த தொகுதியில் காங்கிரஸ் செல்வாக்கு அதிகமாக உள்ளது. பாரம்பரிய ஓட்டுகளும் அதிகமாக உள்ளது.

பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எந்த அளவுக்கு காங்கிரஸ் போட்டியை ஏற்படுத்தும்?  

மத்திய பாஜ அரசு மக்களுக்கு விரோதமான பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. வேளாண் சட்டங்கள் முதல் மீனவர்கள், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு மக்களுக்கு பாதிப்பை தரக்கூடிய திட்டங்களை அமல்படுத்தியதால் அனைத்து தரப்பினரும் கடும் அதிருப்தியில் உள்ளனர். பொன்.ராதாகிருஷ்ணனை ஒரு முறை தேர்ந்தெடுத்த தவறை இனியும் செய்துவிடக்கூடாது என்பதில் குமரி மக்கள் தெளிவாக உள்ளனர். 

Related Stories: