இந்தியா - பங்களாதேஷ் இடையே ஃபெனி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட மைத்ரி சேது பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

டெல்லி: இந்தியா - பங்களாதேஷ் இடையே ஃபெனி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள மைத்ரி சேது பிரம்மாண்ட பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். இந்தியா - பங்களாதேஷ் நாடுகளின் எல்லைகளை இணைக்கக்கூடிய ஃபெனி ஆற்றின் மீது 133 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மைத்ரி சேது பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ள சப்ரூம் பகுதியை பங்களாதேஷில் உள்ள ராம்கர் பகுதியுடன் இணைக்கும் வகையில் 1.9 கிலோமீட்டர் நீளத்திற்கு பிரம்மாண்ட மைத்ரி சேது பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்தியா - பங்களாதேஷ் இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மூலம் இருநாடுகளுக்கும் இடையேயான பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து எளிதாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சுமார் 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். அச்சமயம் சப்ரூம் பகுதியில் 232 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த சோதனைசாவடிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

திரிபுரா மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் பல்வேறு சாலைகளை பிரதமர் திறந்துவைத்தார். இதேபோல் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 40,000 வீடுகளை திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்றிய பங்களாதேஷ் பிரதமர் திருமதி. ஷேக் ஹசீனா, இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பங்களாதேஷ் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Related Stories: