திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை பின்பற்றி ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் இலவசம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500: அதிமுக திடீர் வாக்குறுதி

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை பின்பற்றி, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம் என அதிமுக நேற்று அவசர வாக்குறுதியை அளித்தது. திருச்சியில் திமுகவின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, 7 உறுதிமொழிகளை அறிவித்தார். அதில் முக்கியமாக குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள், ஒரு கோடி பேரை வறுமை கோட்டுக்கு கீழே இருந்து உயர்த்துதல் என்று பல்வேறு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இது தமிழக தேர்தல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.

பின்னர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் நலனுக்கு குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும். மேலும் பல அறிவிப்புகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். அது விரைவில் வெளியிடப்படும். ஏற்கனவே தேர்தல் அறிக்கை 10 நாட்களாக தயாரித்துக் கொண்டு இருக்கிறோம். அது எப்படியோ வெளியில் கசிந்துள்ளது. இந்தியாவில் அனைவரும் கட்சி ஆரம்பிக்க உரிமை உள்ளது. டிடிவி தனியாக கட்சி ஆரம்பித்துவிட்டார். அதைபற்றி என்னிடம் கேட்கிறீர்கள். இந்தியாவில் உள்ள கட்சி போன்று அதுவும் ஒரு கட்சி ஆகும். அதிமுக, அமமுக இணைப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: